திருப்பூர்: கிரிக்கெட் விளையாட்டால் வந்த பிரச்னையை தட்டிகேட்ட தாய் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த செம்மாண்டம்பாளையம் கிராமத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில், பாரதி நகர், மடத்துப்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவது வாடிக்கையான ஒன்று. இருதரப்பினருக்கும் இடையே அவ்வப்போது யார் விளையாடுவது என்று சண்டை நடந்துவந்துள்ளது.
இச்சூழலில் நேற்று (மே 17) வழக்கம் போல் மைதானத்தில் விளையாடிய போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதையடுத்து காயங்களுடன் வீடு திரும்பிய பாரதி நகர் பகுதியின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான சிவா(19), ஜீவா(18) நித்யானந்தம்(16) ஆகிய மூவரையும் கண்ட அவர்களது தந்தை பழனிச்சாமி (40), தாய் கொண்டாள் (35) ஆகியோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மகன் மீது அடி விழாமல் தடுக்க சென்ற தாய் உயிரிழப்பு
இதனையடுத்து மடத்துப்பாளையம் சென்று தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களின் குடும்பத்தினரிடம் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் கைகலப்பாகியுள்ளது.
இதில் மடத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் பேட், கற்களால் தாக்கியதில் சிவா, தாய் கொண்டாள் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக அவரை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று பார்த்தபோது கொண்டாள் இறந்துவிட்டது தெரியவந்தது.
சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் மடத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான தமிழ்ச்செல்வன்(18), சம்பத்குமார்(18), கட்டட தொழிலாளி வரதராஜ்(19), ராஜ்குமார்(18) ஆகிய நான்கு இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இத்தாக்குதல் சம்பவத்தில் இளைஞர்களின் தந்தை பழனிச்சாமி உள்பட பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இச்சூழலில் பாரதி நகர் பகுதி மக்கள் அவிநாசி அரசு மருத்துவமனை முன்பு அவிநாசி - சத்தியமங்கலம் சாலையில் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யக் கோரி திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பெண்ணின் கருப்பையில் பஞ்சு கழிவுகள் - மருத்துவர் மீது கணவன் புகார்!
இதையடுத்து, முதல்கட்டமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையை அடுத்து தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என காவல் துறையினர் உறுதியளித்ததையடுத்து, சிறிது நேரத்தில் மறியலை கைவிட்டனர்.