திருப்பூர்: அரிசி ஆலை உரிமையாளரின் மகன் கடத்தப்பட்டு, மூன்று கோடி ரூபாய் கொடுத்து மீட்கப்பட்ட சம்பவத்தில் துரிதமாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு ஐஜி பாராட்டு தெரிவித்ததைத் தொடர்ந்து, கொள்ளையர்கள் பிடிபட்டது குறித்து செய்தியாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
காங்கேயம் அருகே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் பெரிய அரிசி ஆலை ஒன்றை நடத்திவருகிறார். இவருக்குச் சொந்தமாக திருமண மண்டபம் ஒன்றும் உள்ளது. இவரது மகன் சிவ பிரதீப் (25), ஆலை நிர்வாகத்தை கவனித்துவருகிறார்.
இந்நிலையில் சிவ பிரதீப் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 22) அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டார். தொடர்ந்து, கடத்தல்காரர்கள் அவரது பெற்றோரிடமிருந்து மூன்று கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து, அவரது பெற்றோர் காவல் துறைக்குச் செல்லாமல் கடத்தல் கும்பலுக்கு மூன்று கோடி ரூபாய் கொடுத்து, மதுரை அருகே மகனை மீட்டுள்ளனர். பத்திரமாக மீட்ட பின்னர் இது குறித்து காவல் துறையிடம் தொழிலதிபர் ஈஸ்வரமூர்த்தி புகார் அளித்துள்ளார்.