திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சவிதா. இவரது கணவர் ரவி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் மாமனார் சாமியப்பன், மாமியார் பாலாமணி ஆகியோருடன் வசித்துவருகிறார்.
இந்நிலையில், சவிதா தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (நவ. 25) மனு ஒன்றை அளித்தார்.
அதில், “எனது மாமனார் சாமியப்பனுக்குச் சொந்தமான நிலத்தை மாமியாரின் உறவினர் சௌந்தர்ராஜன் என்பவர் நம்பிக்கை மோசடி செய்து அவரது பெயருக்கு மாற்றியுள்ளார்.
மேலும், சௌந்தர்ராஜனின் ஆசைக்கு நான் உடன்பட மறுத்ததால் என்னை அடித்து துன்புறுத்தினார்.இது தொடர்பாக பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், செளந்தர்ராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது எனது மாமனாரை சௌந்தர்ராஜன், விஸ்வநாதன், ரங்கசாமி ஆகியோர் எங்கோ கடத்தி வைத்துக்கொண்டு நான் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் திரும்பப் பெற்றால்தான் அவர்களை விடுவிப்பதாகவும், இல்லை என்றால் குடும்பத்தோடு கொன்றுவிடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதன் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து இழந்த சொத்தை மீட்டுத்தர வேண்டும்” என்று தெரிவித்தார்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.