திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன. மேலும் மருத்துவமனையை தரம் உயர்த்தும் நோக்கில் பல்வேறு பணிகளும் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணிகளுக்காக மருத்துவமனை வளாகத்தில் இருந்த சுமார் 75 ஆண்டுகள் பழமைமிக்க அரச மரத்தை வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
கடந்த சில தினங்களாக இதற்கான பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், மரத்தை வெட்டாமல் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட திருப்பூரைச் சேர்ந்த கிரீன் அண்ட் கிளீன் அமைப்பு நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற்றனர். சுமார் 16 அடி அகலம் 12 மீட்டர் உயரமுள்ள அரச மரத்தின் ஆணிவேர் தவிர கிளைகள், வேர்கள் வெட்டப்பட்டன.
பின்னர் அவற்றின் வளர்ச்சிக்காக ஊக்கமருந்து வழங்கப்பட்டு மரத்தை தொடர்ந்து கண்காணித்துவந்தனர். ஒரு சில நாள்கள் கழித்து புதிய கிளைகள் துளிர்விடத் தொடங்கியதும் இரண்டு ராட்சத கிரேன்கள் மூலம் இன்று மரம் வேருடன் பிடுங்கப்பட்டது.
திருப்பூரில் 75 ஆண்டுகால அரச மரம் மறு நடவு - கிரீன் அண்ட் கிளீன் அமைப்பினர் ஒத்துழைப்பு சுமார் 15 டன் எடை கொண்ட அந்த அரச மரம் லாரியில் ஏற்றப்பட்டு அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காளம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மறு நடவுசெய்யப்பட்டது. மரம் நடவுசெய்யப்படும் இடத்தில் 12 அடி ஆழத்திலும் 16 அடி அகலத்திலும் குழிகள் தோண்டப்பட்டு அதில் மரத்துக்குத் தேவையான அனைத்து உரங்களும் இடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் - 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிசய மரம்!