தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் லாக்அப் மரணங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும்; தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில், மாநில காவல் துறைக்கும், அரசிற்கும் திமுக கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. மேலும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 25 லட்சம் நிதியுதவியை உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கனிமொழி வழங்கினார்.
இந்நிலையில், விசாரணையின்போது இருவர் உயிரிழந்தது தொடர்பாக திமுக எம்.பி., கனிமொழி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகாரளித்துள்ளார்.