தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரிசல் இலக்கியத் தந்தை கி.ரா.வுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி: 30 குண்டுகள் முழங்க தகனம் - Government pays homage to k. Rajanarayanan's body

கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

கரிசல் இலக்கிய தந்தை கி.ரா.வுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி: 30 குண்டுகள் முழங்க தகனம்
கரிசல் இலக்கிய தந்தை கி.ரா.வுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி: 30 குண்டுகள் முழங்க தகனம்

By

Published : May 19, 2021, 5:19 PM IST

Updated : May 19, 2021, 6:15 PM IST

தூத்துக்குடி: கரிசல் இலக்கியத்தின் முதுபெரும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் அவரது உடலை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் கி. ராஜநாராயணன் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவருக்கு சிலை வைக்கவும், நினைவு மண்டபம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து எழுத்தாளரின் உடல் புதுச்சேரியிலிருந்து நேற்றிரவு அவருடைய சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து அவருடைய பூர்வீக வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. ராஜநாராயணனின் உடலுக்கு திமுக எம்.பி., கனிமொழி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் இன்று(மே 19) அவரது உடலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

திமுக எம்.பி., கனிமொழி மரியாதை
தொடர்ந்து பகல் 12 மணியளவில் ராஜநாராயணனின் உடல் சடங்குகளுக்குப் பின்னர் அவருடைய வீட்டிலிருந்து ஊர்வலமாக தகன மேடைக்கு எடுத்துவரப்பட்டது. இடைசெவல் கிராமத்தில் ராஜநாராயணனின் குடும்பத்தினருக்குச் சொந்தமான தோட்டத்தில் அவரது உடலை தகனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அவரது உடலுக்கு திமுக எம்.பி., கனிமொழி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், எம்.எல்.ஏக்கள் அப்துல் வஹாப், சதன் திருமலைக்குமார், ரகுராமன் மற்றும் துரை வைகோ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

வானத்தை நோக்கி 30 குண்டுகள் முழக்கம்

இதைத் தொடர்ந்து ராஜநாராயணனின் உடலுக்கு காவல் துறையின் சார்பில் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அவரது உடல் சமுதாய வழக்கத்தின்படி தகனம் செய்யப்பட்டது.

எழுத்தாளர் கி. ராஜநாராயணன் உடல் அரசு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க தகனம்
இறுதிச் சடங்கில் பங்கெடுத்த கனிமொழி எம்.பி., செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 'கரிசல் இலக்கியத்தின் முதுபெரும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் முதுமை காரணமாக புதுச்சேரியில் இயற்கை எய்தினார். அவருடைய மறைவு என்பது தமிழ் இலக்கியத்திற்குப் பேரிழப்பாகும். அவருடைய இழப்பை புகழும் வகையில் தமிழ்நாடு அரசு அவருக்கு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதற்காக உத்தரவிட்டது. மேலும், கி.ராஜநாராயணனுக்கு சிலை அமைக்கவும் நினைவு மண்டபம் கட்டவும் அறிவித்து இருப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எளிய நடையில் வழக்கு மொழியில் தமிழ் சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுத்துலகுக்கு அளித்து பங்காற்றியது அளப்பரியது. அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது.
எழுத்தாளரும் மதுரை எம்.பி.,யுமான சு. வெங்கடேசன் இறுதி மரியாதை செலுத்தும் காட்சி
அவருடைய எழுத்துப் பணி என்பது அவர் இறப்புக்குப் பின்னர், அவரைப் பின்பற்றி தொடர்ந்து பேச்சுவழக்கில் கதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதுவதன் மூலம் அவருடைய எண்ணங்கள் நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்" என்றார்.
Last Updated : May 19, 2021, 6:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details