தூத்துக்குடி:கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுப்புராஜ். இவரது மனைவி வனிதா.
இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது கணவர் விபத்தில் சிக்கிய காரணத்தினால் மருத்துவ சிகிச்சைக்காக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ராமமூர்த்தி, புஷ்பா, வேல்முருகன், பூமாரி உள்ளிட்ட சில அரசு ஊழியர்களிடம் 10 பைசா வட்டிக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இதற்கிடையில், உள்ளூரில் சரியான வேலை கிடைக்கவில்லை, வட்டி வேறு கட்ட வேண்டும் என்பதால் சுப்புராஜ் கடன் வாங்கி சவுதிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கும் சொன்னபடி ஊதியம் கொடுக்காமல் குறைவான ஊதியம் கொடுத்த காரணத்தினால் வட்டி கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு வனிதா குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனுக்கு ஒரு வருடத்தில் வட்டியுடன் சேர்த்து 20 லட்சம் ரூபாய் கேட்டு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு அக்குடும்பத்தினருக்கு இடையூறு செய்ததாக வனிதா கூறுகிறார்.