தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவிற்கு உள்பட்ட கல்லூரணி, கோவில்பட்டி தாலுகாவிற்கு உள்பட்ட லாயல்மில் காலனி கொடுக்காம்பாறை ஆகியவற்றில் அம்மா நடமாடும் நியாயவிலைக்கடை மற்றும் லிங்கம்பட்டியில் பள்ளி கட்டட திறப்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்.
இதில் மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி, கூட்டுறவு இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், நகர செயளாலர் விஜயபாண்டியன், கயத்தாறு நகர செயளாலர் வினோபாஜீ, ஒன்றிய செயளாலர் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ் செண்பகராஜ், ஒன்றிய துணைப்பெருந்தலைவர் பழனிச்சாமி மற்றும் அரசு அலுவலர்கள் அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுகவில் பிரச்சினையே இல்லை. துணை முதல்வராக இருந்து ஓ.பி.எஸ். அரசு சிறப்போடு செயல்பட துணையாக இருக்கிறார். செயற்குழுவில் பல்வேறு விவாதங்கள் நடந்தன. தேர்தல் வரும் நேரத்தில், என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம். யாருடன் கூட்டணி வைக்கலாம் என்றெல்லாம் விவாதங்கள் நடைபெறும்.
யார் முதலமைச்சர் என்று கேள்வி அங்கு எழவில்லை. வெளியிலே பேசப்பட்டு தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு உள்ளது. அங்கே எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை தனது ட்விட்டர் பதிவில் துணை முதல்வர் ஓபிஎஸ் சூசகமாக தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் மட்டுமல்ல அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமாக உள்ளார்.