தூத்துக்குடி:காவல் சித்திரவதைக்கு எதிரான மக்கள் கூட்டியக்கம் சார்பாக 'ஜனநாயகம் காப்போம்' என்னும் தலைப்பில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நேற்று(ஆகஸ்ட். 23) கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு தலைமை தாங்கினார். இதில், மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான ஹென்றி திபேன், முன்னாள் எம்.பி. அப்பாதுரை, தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ஹென்றி திபேன், "1996ஆம் ஆண்டிலிருந்து தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தவர்கள் அம்மாவட்ட மக்கள்தான். அவர்களின் உரிமை பறிக்கப்படும் வேளையில் நான் தலையீடு செய்தேன். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஆணைய விசாரணைக்கு சிபிஐ நீதி தரவில்லை. மனித உரிமை ஆணையம் தீர்ப்பு வழங்கவில்லை. இது எனது குற்றச்சாட்டல்ல.
விரைவான விசாரணை கிடையாது
எந்தப்பணியும் விரைவாக நடக்கவில்லை என்பதே எனது ஆதங்கம். குறிப்பாக, இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமோ, காவல் கண்காணிப்பாளரிடமோ விசாரணை நடத்தப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.
ஜனநாயகம் காப்போம் மூலமாக யூஏபி சட்டங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கிறோம். பிணை சரத்தை மறுக்கின்ற சட்டங்கள், அதில் அடங்கியுள்ள விதிமுறைகளை எதிர்க்கிறோம். யூஏபி அரசியலமைப்பு, குற்றவியல் சட்டங்களுக்கு எதிரானது. இது முழுமையாக புறக்கணிக்கப்பட வேண்டும்.
தற்போது பாதுகாப்புத்துறையை தனியார்மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்துறையை சேர்ந்தவர்கள் கூட போராடக் கூடாது என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தூக்கி எறியப்பட வேண்டும். சில சட்டங்கள் கொண்டுவரப்பட்ட நோக்கங்கள் தற்போது மாறியிருக்கலாம். இந்த வேளையில், அதை பயன்படுத்தும் அரசு, அதனைச் சுற்றி உள்ள மோசமான பின்னணியை மாற்ற முயற்சிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு- 6 மாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தல்