இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி இந்திய அரசால் தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு இடங்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும், வாக்காளர் பெயரை பட்டியல் இணைப்பது குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அதனையொட்டி திருவாரூர் பழைய இரயில் நிலையம் முன்பு கல்லூரி மாணவர்கள் மாணவிகள் கலந்துகொண்ட தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட உதவி ஆட்சியர் கிஷோர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் கமலாவாசன் கல்லூரி மாணவர்களின் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணி புதுரோடு, ரெயில்வே ரோடு, பங்களாத்தெரு, கடலையூர்ரோடு, எட்டயபுரம் சாலை வழியாக அரசு மருத்துவமனை முன்பு நிறைவு பெற்றது.