தூத்துக்குடி:கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 150ஆவது பிறந்தநாள் விழா, மாவட்டத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனார் நினைவு இல்லத்தில், அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கீதாஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதன்படி, கடற்கரை சாலையிலுள்ள நேருஜி நினைவு பூங்காவை திறந்து வைத்த பின், வ.உ.சி.சாலை பெயர் பலகை திறப்பு விழாவில் கலந்துகொண்டு கனிமொழி உரையாற்றினார்.
அப்போது, "தூத்துக்குடி மாவட்டம் பெருமைப்படும் விதமாக சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
வ.உ.சிதம்பரனார் மறைவின் போது தந்தை பெரியார் "சிதம்பரத்தின் சிதைவு" எனும் பெயரில் கட்டுரையை எழுதியிருந்தார். அந்த கட்டுரையில் சிதம்பரம் வேறொரு இனத்திலோ, வேறொரு குலத்திலோ பிறந்திருந்தால் கொண்டாடப்பட்டு இருப்பான். அவரது புகழ் நாடெங்கும் பரப்பப்பட்டிருக்கும். ஆனால் இங்கு வந்து பிறந்ததால், சிதம்பரத்தின் புகழ் கொண்டாடப்படவில்லை என எழுதியிருந்தார்.
மக்களவை உறுப்பினர் கனிமொழி உரை தந்தை பெரியாரின் மனதில் முள்ளாய் தைத்த இந்த ஏக்கத்தை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நீக்கினார். தற்பொழுது தந்தை பெரியாரின் மனதில் இருந்த அந்த வருத்தத்தைப் போக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்" எனப் பேசினார்.