தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினி காந்திடம் விசாரணை?

தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேவைப்பட்டால் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என வழக்கறிஞர் வடிவேல் முருகன் கூறினார்.

Tuticorin shooting incident: Rajini to investigate?
Tuticorin shooting incident: Rajini to investigate?

By

Published : Jan 25, 2020, 6:34 PM IST

தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்திவருகிறது. ஒரு நபர் ஆணையத்தின் 18ஆவது கட்ட விசாரணை கடந்த 21ஆம் தேதி தொடங்கி இன்று மதியம் வரை நடைபெற்றது.

விசாரணையின் இறுதியில் வழக்கறிஞர் வடிவேல் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 18ஆம் கட்ட விசாரணை கடந்த 22ஆம் தேதி தொடங்கி இன்றுவரை நடந்து முடிந்துள்ளது. இதில் 704 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு 445 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 630 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு பத்து சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. 18ஆவது கட்ட விசாரணையில் அதிகமாக ஒளிப்பதிவாளர்கள், தொலைக்காட்சி செய்தி சேகரிப்பாளர்கள், செய்தியாளர்கள் ஆகியோர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து போராட்டம் நடைபெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விசாரணையில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தாக்கல்செய்துள்ள 125 பக்க பிரமாண பத்திரம் ஐந்து பகுதிகளாக உள்ளது. எனவே அவரை அடுத்தக்கட்ட விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளோம். அவர் தாக்கல்செய்துள்ள ஆவணங்களைக் காவல் துறையினர் விசாரணை நடத்திய பின்னரே நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் அதனுடைய நகல் காவல் துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பாத்திமா பாபுவும் அடுத்தக்கட்ட விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள், பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதிகள் வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு பரிந்துரைசெய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சில பேருக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரண நிதி பரிசீலனையில் உள்ளன. அவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். மேலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது எங்கெங்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன என்பது குறித்து விவரம் கேட்கப்பட்டுள்ளது.

அது குறித்து விவரம் வந்தவுடன் அது தொடர்பான விசாரணை நடைபெறும். துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கு முன் முந்தைய ஒருவார காலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வுசெய்யவுள்ளோம்.

அது கிடைக்கப் பெற்றவுடன் அது தொடர்பான விசாரணையும் தொடர்ந்து நடைபெறும். இதற்கு அடுத்தக்கட்ட விசாரணையில் காவல் அலுவலர்கள், ஸ்டெர்லைட் குடியிருப்பு ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள் ஆகியோரை விசாரிக்க உள்ளோம்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினி காந்திடம் விசாரணை?

தடயவியல் வல்லுநர்கள், மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் போன்றோரும் விசாரிக்கப்பட உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், துப்பாக்கிச்சூடு தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஒரு சில குறியீடுகளை பேசியுள்ளதாக இங்கு சாட்சிகளாக முன்னிலையானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல்செய்துள்ளனர். எனவே தேவைப்படும் நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தப்படும். தேவைப்பட்டால் அடுத்தக்கட்ட விசாரணையின்போதுகூட நடிகர் ரஜினிகாந்தை முன்னிலையாவதற்கு அழைக்கலாம்.

ஆணையத்தை பொறுத்தவரையில் ராகுல் காந்தியை அழைத்து விசாரிப்பதற்கு தேவையில்லை என நினைக்கிறோம். மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட வேலைகள்கூட தகுதிக்கேற்ற வேலை இல்லை என புகார்கள் வந்துள்ளன. இதனடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு வழக்கறிஞர் வடிவேல் முருகன் கூறினார்.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு கூடுதல் நிவாரணம் - ஹென்றி டிபேன்

ABOUT THE AUTHOR

...view details