சாத்தான்குளம் தந்தை-மகன் அடுத்தடுத்து மரணித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியாகின.
அதில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனின் அழைப்பை ஏற்று, ஜூன் 19ஆம் தேதியன்று ஜெயராஜ் காவல் வாகனத்தில் ஏறுகிறார். அதன் பின்னர் ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ் காவல் நிலையம் செல்வது தெரியவந்துள்ளது.
இதனால் இவர்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்.), “தரையில் புரண்டு சண்டையிட்டனர்” என்று உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கூறியிருப்பது பொய் என்பது இந்த சிசிடிவி காட்சிகள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில், தந்தை-மகன் இரட்டை மர்ம மரணம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்திவருகிறது. இது தொடர்பாக விசாரிக்க கோவில்பட்டி நீதித்துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) பாரதிதாசன் சாத்தான்குளம் சென்றார். அப்போது அவரும் காவலர்களால் மிரட்டப்பட்டுள்ளார்.
மேலும், மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் உரிய ஆவணங்களை ஒப்படைக்க மறுத்து தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் இறுக்கம் காட்டியதாகவும், சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் மாஜிஸ்திரேட்டை வெகுநேரம் காக்க வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதற்கிடையில் மாஜிஸ்திரேட்டை பயமுறுத்துவதுபோல் சுற்றி சுற்றி வந்து, செல்போனில் படம் எடுத்த காவலர் மகாராஜன் என்பவர், “உன்னால ஒன்னும் புடுங்க முடியாது டா” என்று மிரட்டும்படி ஏக வசனத்தில் ஒருமையில் பேசியதுடன், சவாலும் விடுத்துள்ளார்.