தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது ஆண், 73 வயது ஆண், 63 வயது ஆண் ஆகியோர் இன்று அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
அதேபோல், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 58 வயது ஆண் ஒருவரும் இன்று உயிரிழந்தார். ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, கடலோரக் காவல் படை வீரர்கள் மூவர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 195 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 648 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 22 பேர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 240 பேர் வெள்ளிக்கிழமை குணமடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 797 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 260 பேரும், மாவட்டத்தில் உள்ள பிற மருத்துவமனைகள், தனிமை கண்காணிப்பு முகாம்களில் ஆயிரத்து 524 பேரும் என மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 784 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.