தூத்துக்குடி மாநகர பகுதிகளில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க நிகழ்ச்சி தென்பாகம் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,"தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகள், முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று(ஜன.30) தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதிதாக 16 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேமராவினை விவிடி சந்திப்பில் பொருத்தி உள்ளோம். இது அவ்வழியே செல்லும் அனைத்து வாகனத்தின் எண்களையும் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் திறனுடையது. இதன் மூலமாக விவிடி சந்திப்பினை கடந்து செல்லும் எந்த ஒரு வாகனத்தின் பின்புலத்தையும் எளிதில் பெற்றுவிட முடியும்.