தூத்துக்குடி:தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவ மாணவிகள் கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் மற்றும் நற்கருணை பவனி நடைபெறும்.
இங்கு கிறிஸ்துவர்களுக்கு அடுத்தபடியாக இந்துக்களும், இஸ்லாமிய மக்களும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, தங்கள் பிரார்த்தனை நிறைவேற மெழுகுவத்தி ஏந்தி அன்னையை வழிபடுவது கூடுதல் சிறப்பாகும். தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்திருவிழாவில், உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மாதாவைத் தரிசிக்க தூத்துக்குடிக்கு பக்தர்கள் வருவார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் இன்றி திருவிழா நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு கரோனா தொற்று வழிகாட்டுதலின்படி மாஸ்க் அணிந்து பக்தர்கள் புடை சூழ பனிமய மாதா ஆலய கொடியேற்றம் தொடங்கியது.
உற்சாக கோஷம் :காலை, கூட்டுத்திருப்பலிக்குப் பிறகு ஆலயத்தின் முன் உள்ள கொடிக்கம்பத்தில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி தலைமையில், பங்கு தந்தை குமார் ராஜா மற்றும் முக்கியப் பங்கு நிர்வாகிகள் முன்னிலையில், பனிமய மாதா ஆலயத்திருவிழாவின் கொடி ஏற்றப்பட்டது. அப்போது பனிமய மாதாவை வேண்டி மரியே வாழ்க, மரியே வாழ்க என குரல் எழுப்பியும், சமாதான புறாக்களை பறக்கவிட்டும் விழா தொடங்கப்பட்டது.
இத்திருவிழாவை முன்னிட்டு சுமார் 1000 போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் ரோஸ்லின் கூறுகையில், 'தூத்துக்குடி பனிமய மாதா ஆலய 440ஆவது ஆண்டு திருவிழாவின் கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகள் கரோனா காரணமாக மக்கள் வரவில்லை. ஆனால், இன்று பேரலாயத்தில், பக்தியோடு ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர்.