தூத்துக்குடி:கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், 'இலங்கையில் மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலகும் நிலை மக்கள் போராட்டத்தால் நிகழ்ந்திருக்கிறது; மக்கள் சக்தி மகத்தான சக்தி என்பதை இலங்கை வாழ் மக்கள் குறிப்பாக ராஜபக்சவை ஆதரித்த சிங்களவர்கள் இன்றைக்கு உலகுக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.
மக்களிடம் தோற்று பின்வாங்கிய ராஜபக்ச: இரக்கமின்றி நீதி, நேர்மை இன்றி இன வெறியாட்டம் நடத்தி, ஈழத்தமிழ் மக்களைக்கொன்று குவித்த ராஜபக்சவுக்கு இன்று சிங்கள இனத்தைச்சேர்ந்த மக்களே பாடம் புகட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் ஆதரவு என்னும் பெயரால் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப்போராட்டத்தையும் நசுக்கிய ராஜபக்ச இன்றைக்கு உலக நாடுகளின் ஆதரவைப் பெற இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இதனால், பொருளாதார நெருக்கடி மக்கள் போராட்டம், வன்முறை வெறியாட்டம், இலங்கை வீதிகளில் பரவும் நெருப்பு என ராஜபக்ச இன்றைக்கு மக்கள் முன்னால் தோற்று பின்வாங்கி ஓடிக்கொண்டிருக்கிறார்.
இது இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு ஒரு படிப்பினையாக உள்ளது. அங்கே மொழிவெறி, இனவெறி, ஒரே இலங்கை, ஒரே சட்டம், ஒரே ஆட்சி நிர்வாகம் என்று எல்லாவற்றையும் ஒற்றைத்தன்மையை நோக்கிச்சென்ற ராஜபக்ச குடும்பம்; அந்த தேசத்தை இட்டுச் சென்றதே அங்குள்ள பன்முகத்தன்மையை சிதைத்தது.
இலங்கையைப் போலவே; இந்தியாவை மோடி அரசு வழிநடத்துகிறது:ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட பல தேசிய இனங்கள் அங்கு நசுக்கப்பட்டன. அதே நிலையில்தான் இன்றைக்கு மோடி அரசு இந்தியாவை வழி நடத்திக்கொண்டிருக்கிறது. இந்தியா ஒரே நாடு, ஒரே கலாசாரம் என்ற பெயரில் அனைத்தையும் ஒற்றைத்தன்மையை நோக்கி இட்டுச்செல்கிறது. திட்டமிட்டு திணிக்கிறார்கள். இந்தியாவின் ஒரே மொழியாக இந்தியை இருக்கவேண்டும் என்று.
தூத்துக்குடியில் திருமாவளவன் எம்பி பேட்டி இலங்கையைப் போல சங்பரிவார் அமைப்பினால் இந்தியாவிலும் நடக்கும்:இந்தியாவின் ஒரே கட்சியாக பாஜக இருக்கவேண்டும். இந்தியாவின் ஒரே ஆட்சியாக பாஜக ஆட்சி இருக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் ஒத்தத் தன்மையை நோக்கி இட்டுச் செல்லும் போக்கு, இந்தியாவிலும் வலுப்பெற்றிருக்கிறது. இலங்கையில் நிகழ்ந்தது இந்தியாவில் நிகழும் என்பதை பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள், சங்பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள், ஆட்சியில் இருப்பவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புவதாக’ அவர் குறிப்பிட்டார்.
குடிசைகள் அகற்றத்தை சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டு தடுத்திருக்கலாம்:சென்னை பெருநகரத்தில் நீதிமன்றத்தின் ஆணை என்கிற பெயரால் தற்போது ஏழை, எளிய மக்களின் குடிசைகள் ஈவு இரக்கமின்றி அப்புறப்படுத்தப்படுவதும் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தும் மனப்போக்கும் தொடர்ந்து நீடிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நீதிமன்றம் அறிவித்தாலும் அதைத் தடுப்பதற்கு சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் அதிகாரம் உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றார்.
'லாக் அப் டெத்'-ஐத் தவிர்க்க தனி விசாரணை ஆணையம் அமைக்கவும்: ’பட்டா கேட்டு தீக்குளித்து இறந்த கண்ணையன் குடும்பத்திற்கு அரசு வேலைவாய்ப்பு, இழப்பீட்டுத் தொகையாக ரூ.50 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் 'லாக் அப் டெத்' (Lock Up Death) குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும்’ என்று அரசிற்கு கோரிக்கை வைத்தார். அத்துடன், ’தொடர்ச்சியான இதுபோன்ற செயல்கள் தமிழ்நாடு அரசிற்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தும். இதுபோன்று நிகழாமல் இருக்க முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமைக்க முதலமைச்சர் கவனம் தேவை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது இன்றியமையாத தேவை. திமுக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தைத் தரும் என்ற நம்பிக்கையோடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மிகப்பெரிய அளவிலே இந்த தேர்தலில் ஆதரவு நல்கி இருக்கிறார்கள். கட்டாயம் பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். பொருளாதார நெருக்கடியை காரணம்காட்டாமல் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முதலமைச்சர் அவர்கள் முன்வரவேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்தார்.
பிரதமர் மோடிக்கு மக்களைப் பற்றிய சிந்தனை இல்லை: ’மோடி அரசு நீடிக்கும் வரையில், பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறிக்கொண்டே தான் இருக்கும்; கார்ப்பரேட் நிறுவனங்களை வழங்கவேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் செயல்படுகிறார். ஏழை எளிய மக்களைப் பற்றி அவர் சிந்திப்பதில்லை; கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்கவேண்டும். அதானி மற்றும் அம்பானி போன்ற அவரது நண்பர்களை வளர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் செயல்படுகிறார். ஏழை எளிய மக்களைப் பற்றி அவர் சிந்திப்பதில்லை.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தருவது தமிழ்நாடு அரசின்கடமை: காங்கிரஸ் அல்லாத அணி என்பது பாஜகவுக்கு துணை செய்கின்ற அணியாக மாறிவிடும்; அது பாஜகவுக்கு பி-டீம் ஆக மாறிவிடும். காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பாஜக எதிர்ப்புக் கட்சிகள் மற்றும் அனைத்தும் ஜனநாயக சக்திகள் யாவரும் அகில இந்திய அளவில் அணி திரள வேண்டிய தேவை இருக்கிறது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அடைக்கலம் தர வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை. ராஜபக்ச என்ன நிலைப்பாடு எடுப்பார் எனத் தெரியாது. அவர் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.
ஓராண்டு காலத்தில் முதலமைச்சர் நல்லாட்சி வழங்கியுள்ளார். ஆதலால் தான் அவருக்கு அகில இந்திய அளவில் சிறந்த முதலமைச்சர் என்று நற்சான்றிதழ் கிடைத்திருக்கிறது. எதிர்க்கட்சி என்பது தமிழ்நாட்டில் அதிமுக தான்; பாஜக எதிர்க்கட்சியாக வர வாய்ப்பில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Exclusive: 'பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூட தகுதி இல்லை'- திருமாவளவன் விமர்சனம்