சுதந்திரத்திற்குப்பின் இந்தியாவின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் பொருட்டு, அப்போதைய பிரதமர் நேரு தலைமையிலான அரசு ஐந்தாண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம் உள்ளிட்டவற்றில் தொழில் புரட்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்தும் ஐந்தாண்டு திட்டங்கள் தொடர்ந்து வகுக்கப்பட்டு, நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிக்கோலிடப்பட்டது. இந்த நடைமுறை தற்போது வரையிலும் நீடித்து வருகிறது.
காலத்தின் மாற்றத்திற்கேற்ப நாட்டின் வளர்ச்சியும், திட்டங்களும், அதை சார்ந்த தேவைகளும் அதிகரித்து வருகின்றன. நாட்டில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கம், அதி நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, நான்காம் தலைமுறையைத் தொடர்ந்து ஐந்தாம் தலைமுறை இணைய வேகம் உள்ளிட்டவை அடுத்தடுத்து இந்தியாவின் சந்தையை சர்வதேச நிலைக்குத் தரம் உயர்த்திக் கொண்டிருக்கின்ற வேளையில், பெட்ரோல்-டீசல் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
வாகனப் பெருக்கத்தின் காரணமாக இந்தியச் சந்தையில் எரிபொருள் தேவை அதிகமாகி உள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் கச்சா எண்ணெய்யை டாலர்கள் விலையில் இந்தியாவுக்கு பேரல்களில் அடைத்து அனுப்புகின்றன. இவை நமது நாட்டின் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையின் மூலமாகப் பிரித்தெடுக்கப்பட்டு பெட்ரோல், டீசலாக சந்தைப்படுத்தப்படுகிறது. இவ்வாறு சந்தைப்படுத்தப்படும் எரிபொருளுக்கு அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே 15 நாட்களுக்கு ஒருமுறை விலையை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பெட்ரோல் நிலையங்களில் விற்கப்படும் எரிபொருளுக்கு அடிப்படை விலையைத் தவிர, மத்திய அரசின் பங்கு, மாநில அரசின் பங்கு மற்றும் விற்பனையாளரின் பங்கு ஆகியவை அடங்கிய மொத்த விலையிலேயே ஒரு லிட்டர் எரிபொருள் நுகர்வோர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறாக சந்தையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 93 ரூபாயாகவும், டீசல் விலை 86 ரூபாயாகவும் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு லிட்டர் பெட்ரோல் 73 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் அதன் விலை மெல்ல மெல்ல அதிகரித்து தற்போது 90 ரூபாயைத் தாண்டி நிற்கிறது.
நாட்டின் சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்து உள்ளதையும், இந்த தருணம் நாம் நினைவுகூற வேண்டியிருக்கிறது. இன்று அவசர தேவைகள் முதல் அருகே இருக்கும் கடைக்கு செல்வதற்குக்கூட, நாம் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தும் நிலைக்கு மாறி இருக்கிறோம். எனவே, எரிபொருளின் தேவை என்பது இன்றியமையாத ஒன்றாக மாறி உள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பது போல அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அரசின் பொறுப்பே.
ஆனால், இன்று அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை சாமானிய மக்களின் வாழ்க்கையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக மாறி உள்ளது. இன்று உணவுத் தேவைக்காக காய்கறிகள் வாங்குவது தினசரி வாடிக்கைகளில் ஒன்று. காய்கறிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வதற்கு வாகனங்கள், சரக்கு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலையானது காய்கறிகள் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து கள ஆய்வு செய்து அறிக்கை தர ஈடிவி பாரத் விரும்பியது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கள ஆய்வு செய்ய நேர்கையில் வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகரித்துவரும் காய்கறி விலை உயர்வு குறித்து நம்மிடையே மனம்திறந்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
அதன்படி விவசாயி வரதராஜன் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகாவைச் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் மானாவாரி பயிர் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உளுந்து, பாசி, கம்பு, தினை, சோளம் இதுதவிர மிளகாய் வத்தல், கத்தரிக்காய் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் விவசாய விளைபொருள்களை கொள்முதல் செய்ய ஆங்காங்கே அரசு சார்பில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும், அவைகள் போதுமான அளவு இல்லை.
எனவே, விளைபொருள்களை சேமித்து வைக்க பெரும்பாலும் தனியார் பதப்படுத்தும் உணவு கிடங்குகளையே நம்பி இருக்க வேண்டி இருக்கிறது. தனியார் உணவுபதப்படுத்தும் கிடங்குகள் விளாத்திகுளத்தில் இருந்து நெடுந்தொலைவில் அமைந்துள்ளன. குறிப்பாக கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகியப்பகுதிகளுக்கு விளைபொருள்களை கொண்டுவந்து சேமிக்கும் நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இதற்கு ஆகும் வண்டி செலவு, நேர விரயம் ஆகியவை காய்கறி விளைபொருட்களின் விலையில் பிரதிபலிக்கிறது.