தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 1, 2019, 11:40 PM IST

ETV Bharat / city

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா: ஐ.ஜி., மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி: திருச்செந்தூர் சூரசம்ஹார விழா முன்னேற்பாடு பணிகளை தென்மண்டல ஐ.ஜி., மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நாளை நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகளை தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஷ்வரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிமன்யூ, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பக்தர்கள் தங்குமிடங்கள், கடற்கரை பகுதி, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டனர். மேலும், கோயில் வளாகம், புறக்காவல் நிலையம், கடலோர பாதுகாப்பு தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு மீட்புக் குழுவினரின் உபகரணங்களைப் பார்வையிட்டனர்.

நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் தலைமையில் பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா

திருவிழாவில் பாதுகாப்புப் பணிகளில் 3000க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் வசதிக்காக 250 பேருந்துகள் தயாராக உள்ளது. கூடுதல் பேருந்துகள் தேவைக்கும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details