தூத்துக்குடி:தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மாத்திரைகள் கடத்தப்படுவதாக கியூ-பிரிவு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவியாளர் மாரி ஆகியோர் திரேஸ்புரம் பகுதிக்குச்சென்று நேற்று (ஜூலை 26) ஆய்வு செய்தனர்.
பின்னர், அங்கு பதிவு எண் இல்லாமல் இருந்த நாட்டுப் படகுகளை அவர்கள் சோதனை செய்தபோது இலங்கைக்கு கடத்தயிருந்த சுமார் 443 அட்டைகளில் 4 ஆயிரத்து 430 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி, படகுகளில் இருந்தவர்கள் தப்பிச்சென்றதால் நாட்டுப்படகை பறிமுதல் செய்து மாத்திரைகளை சுங்கத்துறை அலுவலர்கள் வசம் ஒப்படைத்தனர். ப்ரீகபலின் 150mg மாத்திரை ஒரு வலிப்புத்தாக்க எதிர்ப்பு மருந்தாக உள்ளதாகவும், இது நீரிழிவு, நரம்பு வலி, வலிப்பு, தண்டுவடப் பாதிப்பு, ஓய்வற்ற கால் நோய் மற்றும் பொதுவான பதற்றக்கோளாறு சிகிச்சைக்குப் பயன்படுவதாக அலுவலர்கள் கூறினர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, புகையிலை, மஞ்சள், ஏலக்காய், களைக்கொல்லி மருந்து எனக் கடத்தி வந்த நிலையில், தற்பொழுது மாத்திரைகளையும் கடத்துவது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீர் குல்காமில் தொடங்கியது துப்பாக்கிச்சூடு