தூத்துக்குடி சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சந்தேகத்திற்கிடமான முறையில் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சாத்தான்குளம் காவல் துறையினர்தான் அவர்களை அடித்துக் கொலை செய்ததாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இச்சம்பவத்திற்கு எதிராகக் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்திவருகிறது. சிறை மரணம் குறித்து கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை நடத்திவருகிறார்.
கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணையைத் தொடங்கிய அவர், நேற்று முன்தினம் சாத்தான்குளத்தில் தனது விசாரணையைத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து, சாத்தான்குளம் காவல் நிலைய காவல் துறையினர், ஜெயராஜின் குடும்பத்தினர், சாட்சிகளிடம் விசாரணை நடத்திவருகிறார்.
சிறைக்கு அழைத்துச் செல்வதற்கு முன் ஜெயராஜையும், பென்னிக்ஸையும் காவல் துறையினர் அடித்துத் துன்புறுத்திய நிலையில், அவர்கள் இருவரும் அதிக ரத்தப்போக்கினால் உடல்நலம் குன்றி காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கிளைச் சிறையில் அவர்கள் இருவரும் அடைக்கப்படுவதற்கு அரசு மருத்துவர் வினிலா மருத்துவச் சான்றிதழ் வழங்கியுள்ளார். அவர் அளித்த சான்றிதழில் ஜெயராஜும், பென்னிக்ஸும் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். ஜெயராஜும், பென்னிக்ஸும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை முறையாகப் பரிசோதனை செய்து சிகிச்சையளிக்காமல், முழு உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர் வினிலாவிடம் விசாரணை நடத்த கோரிக்கை எழுப்பப்பட்டது.
ஆனால் மருத்துவர் வினிலா, சம்பவம் நடைபெற்ற நாள் முதல் தொடர்ந்து மருத்துவ விடுப்பில் உள்ளதால், அவரிடம் விசாரணை நடத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனப் பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், மருத்துவர் விடுப்பில் சென்றுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.