தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வரலாற்றில் முதல் நிகழ்வு: வருவாய்த் துறை கட்டுப்பாட்டின் கீழ் சாத்தான்குளம் காவல் நிலையம்!

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு காவல் நிலையம் வருவாய்த் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுவது வரலாற்றில் முதன்முறையாகும். காவல் நிலைய பொறுப்பாளர்களாக வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் காவல் நிலையம்
சாத்தான்குளம் காவல் நிலையம்

By

Published : Jun 30, 2020, 8:21 PM IST

Updated : Jun 30, 2020, 9:06 PM IST

சாத்தான்குளம் விவகாரத்தில் காவல் துறையினர் விசாரணைக்குச் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று நீதித்துறை நடுவர் அளித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி காவல் நிலையத்தை வருவாய்த் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் பொருட்டு, சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குப் பொறுப்பாளர்களாக வட்டாட்சியர், துணை வட்டாட்சியரை நியமித்துள்ளார்.

காவல் துறை வரலாற்றில் ஒரு காவல் நிலையம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுவது இதுவே முதன்முறையாகும். 1861ஆம் ஆண்டு காவல் துறைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இவ்வாறு நடப்பது இதுவே முதல்முறை என்றும், இந்நிகழ்வு காவல் துறையினருக்கு ஏற்பட்ட பெருத்த அவமானம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓய்வுபெற்ற டிஜிபி ஆஸ்தானா (கேரளா) கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் கரோனா பாதித்த இடங்களான கிருஷ்ணராஜபுரம், பூபாலராயபுரம், கதிர்வேல்நகர் உள்ளிட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. தூத்துக்குடி மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 தெருக்கள், கோவில்பட்டி நகராட்சியில் 15 தெருக்கள் ஆகியவற்றில் கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி வீடு வீடாகச் சென்று சுகாதாரத் துறை அலுவலர்களால் காய்ச்சல் உள்ளதா எனப் பரிசோதனை செய்யப்படுகிறது.

பரிசோதனையில் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் அவர்களுக்கு உடனடியாகக் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் நபர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெளியூரிலிருந்து வரும் நபர்கள் குறைந்துள்ளதால், கரோனா பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

Last Updated : Jun 30, 2020, 9:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details