தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"தேசிய அளவிலான விருது ஊக்கமளிக்கிறது" - சிறந்த ஆட்சியர் விருதை பெற்ற சந்தீப் நந்தூரி பூரிப்பு! - ‌தேசிய அளவில் சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருது

தூத்துக்குடி: திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தியமைக்கு அதன் முன்னாள் மாவட்ட ஆட்சியரான சந்தீப் நந்தூரிக்கு சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது. அவருடன் ஒரு சிறப்புப் பேட்டியைக் காணலாம்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

By

Published : Aug 31, 2019, 10:07 PM IST

‌தேசிய அளவில் சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருது சமீபத்தில் புதுடெல்லியில் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட 16 ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கினார். விருது பெற்ற மாவட்ட ஆட்சியர்களுள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் ஒருவர். தமிழ்நாட்டிலிருந்து, தேசிய அளவிலான விருதைப் பெற்ற முதல் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை திறம்படச் செயல்படுத்தியதற்காக, அவருக்கு தேசிய அளவிலான சிறப்பு விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஈடிவி பாரத் செய்திகளுக்காகச் சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருது என்னை மேலும் ஊக்கப்படுத்துவதற்கும், எனது பணியை மேலும் முனைப்புடன் செயல்படுத்துவதற்கும் உதவிகரமாக இருக்கும்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக நான் பொறுப்பிலிருந்தபோது, கழிவுநீரைச் சுத்திகரித்து அதனை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் ஆலோசித்தேன். அப்போது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, திட்டங்களாகச் செயல்படுத்துவதற்கு ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர்களும், ஊழியர்களும், பணியாளர்களும் உறுதுணையாக இருந்தனர்.

மேலும், இம்மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளம் கிராமத்தில் உள்ள ஊருணிகள், குளங்கள், கண்மாய்கள், தூர்வாரப்பட்டு அதில் வந்து சேரும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் விவசாயத்திற்குப் பயன்படும் படியாகத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. தற்போதும் அங்கு இந்த முறையில் நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறந்த நீர் மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்தியதற்காக, வழங்கப்பட்ட விருதினை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், திட்டத்தைச் செயல்படுத்த உறுதுணையாக இருந்தவர்களுமே சமர்ப்பிக்கிறேன்.

தற்பொழுது தூத்துக்குடி மாவட்டத்திலும் மத்திய மாநில அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்குச் சென்று சேரும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே உணவகம் ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் மறு வாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த உணவகத்தில் 12 மாற்றுத்திறனாளிகள் பணியாற்றி வருகின்றனர்.

இதுபோல திருநங்கைகளின் மறுவாழ்வுக்காகப் பசுமை வீடுகள் கட்டும் திட்டமும், அவர்களுக்குள் குழு அமைத்து கூட்டுறவு கடன் சங்கம் மூலம் மாடுகள் வாங்குவதற்கு தொழிற்கடன் வழங்கும் திட்டமும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மாடுகளிலிருந்து கறக்கும் பாலினை, ஆவின் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்களை குறு தொழில் முனைவோர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்புப் பேட்டி

துப்பரவு பணியாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்காக "நியூ விங்ஸ்" எனும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கு கல்வி, தொழில், பயிற்சி வழங்குவதற்கும் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details