கரோனா, உயிரிழப்பு, தடை, பொது முடக்கம், தொழில் இழப்பு, தொழிற்சாலை மூடல், இப்படியாக முடிந்துள்ளது 2020 ஆம் ஆண்டு. பொது முடக்க தளர்வுகளை அடுத்து மக்கள் தற்போது தான் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். சிறுகுறு தொழில்களும், தொழிலாளர்களும் மறுபடியுமான ஒரு புது வாழ்வுக்கு தயாராகியுள்ளனர்.
முடங்கிய தொழிலுக்கு புத்துயிரூட்டவும், புது தொழில் தொடங்கவும் பலரும் முயன்று வருகின்றனர். அவ்வாறானவர்களுக்காகவே தமிழ்நாடு சிறு குறு தொழில் முனைவோர் கழகம் குறைந்த வட்டியில் பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது. முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் தொகையை கணக்கிட்டு அதற்கேற்ப மானியமும் அளிக்கப்படுகிறது. மேலும் திருமணமாகாத படித்த இளைஞர்களுக்கு 6% வட்டி விகிதத்திலும், கண்டுபிடிப்புகள், காப்புரிமை பெற்றவர்கள் ஆகியோருக்கு முதலீடு ஏதுமின்றியும் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.
தளர்வுகளை அடுத்து செங்கல் சூளை, கயிறு உற்பத்தி போன்ற தொழில்கள் தொடங்கப்பட்டாலும், முன்பு போல் ஏற்றுமதி மிக எளிதாக இல்லாததால் அரசின் சலுகைகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறுகின்றனர் தொழில் முனைவோர். இதனால், தொழிலாளர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க முடியவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இவை தவிர பல்வேறு தொழில்களும் அதன் தொழிலாளர்களும் மீட்டுருவாக்கத்தில் தங்களை ஈடுபடுத்தியுள்ளனர். கடன்கள், மானியங்கள் போன்றவற்றை அளிப்பதில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அப்போதுதான் நசிந்துபோன தொழிலும், அதனை நம்பியுள்ள உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் வாழ்வும் வளம் பெறும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். புத்தாண்டு அவர்களுக்கு பொலிவை தரட்டும்.
முடக்கத்திலிருந்து சிறு குறுந்தொழில்கள் மீள என்ன வழி? இதையும் படிங்க: முதல் முறையாக மதுரையிலிருந்து வங்கதேசத்திற்கு டிராக்டர்கள் ஏற்றுமதி - தென்னக ரயில்வே சாதனை!