தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பகுஜன் திராவிட கட்சி நிர்வாகிகள், அக்கட்சியின் மாவட்ட தலைவர் செல்வா பாண்டியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வா பாண்டியன், பட்டியல் இனத்தில் உள்ள பள்ளர் இன மக்களை, பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செயல்பட்டு வருகிறார்.
அவர் பள்ளர் இன மக்களுக்குள் மத வெறியை தூண்டும் நோக்கில், சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
தேவேந்திர குல மக்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி வரும் 6ஆம் தேதி, புதிய தமிழகம் கட்சியினர் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். பள்ளர் இன மக்களுக்குள் மதவெறியை தூண்டும் வகையில் செயல்படும் கிருஷ்ணசாமியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இதைத் தடுக்க தவறினால் டிசம்பர் 6ஆம் தேதி, 10 லட்சம் பள்ளர் இன மக்களை ஒன்று திரட்டி முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.
இதையும் படிங்க :யாருக்கு அடிமையாக அதிமுக ஆட்சி செயல்படுகிறது? - அதிமுக முன்னாள் எம்.பி. 'பளீச்'