தூத்துக்குடி: அரசு மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சில நாள்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், தொடர்ந்து இரண்டு நாள்கள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதனால் மாநகரின் தாழ்வான பகுதியிலுள்ள சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழந்தது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு, மருத்துவமனை நுழைவு வாயிலில் மழைநீர் புகுந்து குளம் போல் காட்சி அளிக்கிறது.
இதனால் நோயாளிகளும். பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அரசு மருத்துவமனை அருகில் நீதிமன்ற குடியிருப்பும், தூத்துக்குடி - பாளை ரோடு, செயின் பீட்டர் தெரு, கதிர்வேல் நகர், ராஜீவ் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட தாழ்வான இடங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி இதனிடையே தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மழைநீரை அகற்றும் பணி பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. இன்று காலை 8 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 1030.40 மிமீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 215 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 54.23 மிமீ பதிவாகியுள்ளது.