வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக தென் தமிழ்நாட்டில் பலத்த கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு அரசு பல்வேறு முன்னொச்சரிக்கை நடவடிக்களை மேற்கொண்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று(டிச.3) நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் உதயகுமார், “தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையொட்டிய பகுதிகளில் வசித்துவரும் மக்களையும், தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டுள்ள 36 வசிப்பிடங்களில் வாழ்ந்துவரும் மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் உபரிநீா் வெளியேற்ற பொதுப்பணி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வாரமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் கரைக்கு திரும்பவேண்டும், யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளோம். அனைத்து மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கஜா புயலைப் போன்று அதே வலுவுடன் வருவதால் அதை கையாள தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மக்களுக்கு உதவ தேவையான அனைத்து மருத்துவ வசதிகளுடன் மீட்பு படை, கடற்படை தயாராக இருக்கிறது. மக்களுக்குத் தேவையான அனைத்து உணவு பொருள்களும் அதிகளவில் சேமித்துவைக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்பட தேவை இல்லை.தாழ்வான, கடற்கரை பகுதிகளில் இருப்பவர்களுக்காக முகாம்கள் தயாராக இருக்கின்றன.