தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் மேற்பார்வையில், கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான காவலர்கள் கயத்தாறு பகுதியில் நேற்று (மே 31) ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கே ஒரு தோட்டத்தில் உள்ள மோட்டார் ரூமில் திருநெல்வேலி மானூர் வடக்கு வாகைக்குளத்தைச் சேர்ந்த கணேசன் (42) என்பவர் ஒரு பேரலில் 240 லிட்டர் கள்ளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கணேசன் கடந்த ஒரு வாரமாக அங்குள்ள பனை மரங்களிலிருந்து கள் இறக்கி, ஒரு பேரலில் 240 லிட்டர் கள்ளை சேர்த்து வைத்து, அதில் ஊமத்தங்காய் சாற்றை கலப்படம் செய்து விற்பனை செய்வதற்காகத் தயாராக வைத்திருந்துள்ளார்.
பின், அந்த 240 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர். இது குறித்து கயத்தாறு காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் கள் விற்பனை செய்தவரை கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட கள்ளை அழித்த கயத்தாறு காவல் நிலைய காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு: மக்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கிய காவல் துறை!