தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்காக பொட்டல்காடு கிராமத்திற்கு எரிவாயு குழாய் தளவாடங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்தும், இறக்கி வைக்கப்பட்டிருந்த குழாய்களை எடுத்துச் செல்ல வலியுறுத்தியும் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த முத்தையாபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊர்மக்களின் அனுமதியின்றி பொட்டல்காடு கிராமத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெறாது என காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் லாரியை விடுவித்தனர். அதனைத்தொடர்ந்து லாரி முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டுச் செல்லபட்டது.