தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள சல்லி செட்டிபட்டி கிராமத்தில் ராதா - செல்லபாண்டியன் தம்பதியினருக்கு சொந்தமான வீட்டில் கடந்த ஜூலை 20ஆம் தேதி திருட்டு சம்பவம் அரங்கேறியது. வீட்டு பீரோவில் இருந்த 80 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் திருடுபோனது குறித்து, சங்கரலிங்கபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவத்தில் திடீர் திருப்பமாக செல்லபாண்டியனின் உறவினர் மணிகண்டன் என்பவர்தான் திருடியுள்ளது விசாரணையில் அம்பலமானது. இச்சம்பவம் நடந்த இரண்டு நாள்களுக்குப் பின் மணிகண்டன், தான் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு மதுரை சென்றுள்ளார்.
இச்சூழலில் காவல் துறையினர் மாயமான நகை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், முதற்கட்டமாக மணிகண்டனை விசாரணைக்காக அழைத்துள்ளனர். ஆனால், மணிகண்டன் விசாரணைக்கு வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த காவலர்கள் மணிகண்டனை பிடித்து, விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
முதலில், மணிகண்டன் தன்னுடைய நண்பர் வசந்தகுமார் என்பவருடன் செல்லப்பாண்டியன் வீட்டில் திருடிய பணத்தை வைத்துக்கொண்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அவர்கள் மது அருந்தியபடியே பேசிக்கொண்டு, நகையை எவ்வாறு விற்கலாம் என்று தேனியைச் சேர்ந்த தனது நண்பர் பிரபாகரனை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது, தான் நேரடியாக வருவதாகவும், நகையை விற்று தருவதாகவும் பிரபாகரன் கூறியுள்ளார்.