தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை மாநில அரசு நியமித்தது. அந்த ஆணையம் தூத்துக்குடி, சென்னையில் தனி அலுவலகம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் ஆணையத்தின் 14ஆம் கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. அதன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் முன் ஆஜராகும்படி, 28 பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், முதல் நாளான நேற்று ஆறு பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இருவர் மட்டுமே ஆஜரானார்கள்.
2ஆம் நாளான இன்று தொடங்கிய விசாரணையில், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் ஹரிராகவன் ஆகியோர் ஆஜரானார்கள். பின்னர் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிசூடு: முதலமைச்சரை விசாரிக்க வேண்டும்! வாஞ்சிநாதன் கோரிக்கை அப்போது அவர் பேசுகையில், “விசாரணையில் தூத்துக்குடி போராட்டம் என்பது மக்கள் திரள் போராட்டம் என்பதற்கான ஆவணங்களை நீதிபதி அருணா ஜெகதீசன் தாக்கல் செய்துள்ளேன். காவல் துறை சார்பில் உள்ள வழக்கறிஞர் தன்னிடம் குறுக்கு விசாரணை செய்வதாகத் தெரிவித்து, ஸ்டெர்லைட் வழக்கறிஞர்போல் நடந்து கொண்டார்.
குறிப்பாக 22ஆம் தேதி, ஆலையை மூடும் விவகாரத்தில் சரியான நடவடிக்கையை மாநில அரசு எடுக்காததுதான் காரணம் என்பது குறித்த ஆவணங்கள் சாட்சியாக வழங்கியுள்ளேன். இதில் காவல்துறை உயர் அலுவலர்களும் சம்பந்தப்பட்டுள்ளதையும் விளக்கியுள்ளேன்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் வழக்கு தொடர்பாகக் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி அன்றைய தினம் பொறுப்பிலிருந்த ஆட்சியர், காவல் துறை அலுவலர்களையும் விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களை நாங்கள் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதி அருணா ஜெகதீசனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முகிலனை நேரடியாக அழைத்து வந்து விசாரணை நடத்தப்படும் என நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார்” என்றார்.