தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கோடநாடு விவகாரத்தை அரசு கைவிட வாய்ப்பே இல்லை’ - கனிமொழி உறுதி

கோடநாடு வழக்கு பல்வேறு சிக்கல்களைக் கொண்ட வழக்கு என்பதால் அரசு அதை கண்டுக்கொள்ளாமல் இருக்க வாய்ப்பேயில்லை என மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி, மக்களவை உறுப்பினர் கனிமொழி, kanimozhi, kanimozhi mp
தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி

By

Published : Aug 20, 2021, 8:16 AM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தொடர்ச்சியாக வழங்குவதற்கு போதுமான வசதிகள் இல்லாமல் இருந்தது. இது குறித்து, தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் மக்களவை திமுக குழுவின் துணைத் தலைவருமான கனிமொழியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கனிமொழி மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தனியார் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியுடன் சுமார் 38 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆக்ஸிஜன் இருப்பு இயந்திர அறை அங்கு உருவாக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இந்த மருத்துவமனையில் உள்ள 60 படுக்கைகளுக்கும் ஆக்ஸிஜன் வழங்கும் வகையில் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன் அறை திறப்பு

இந்த ஆக்ஸிஜன் இருப்பு இயந்திர அறையைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் நேற்று (ஆக.19) நடைபெற்றது. இதில், கனிமொழி கலந்துகொண்டு ஆக்ஸிஜன் இருப்பு இயந்திர மையத்தைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள படுக்கையில் வசதிகளையும் பார்வையிட்டார்.

ஆக்ஸிஜன் இருப்பு இயந்திர அறையை தொடங்கி வைத்த கனிமொழி

மேலும், மாநில அளவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்த தூத்துக்குடி மாவட்ட டென்னிஸ்அணியினரை சந்தித்த கனிமொழி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மூன்று வீரர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

கருணாநிதி போல ஸ்டாலின்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "அதிமுக அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் எந்தவிதமான வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதில் குறியாக இருந்தார்கள். ஆனால், திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் கடந்த கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல தற்போதும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். திமுக தேர்தல் வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருவதால் அதைப் பொறுக்க முடியாமல் அதிமுகவினர் காழ்ப்புணர்ச்சி காரணமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதிமுகவின் மடியில் கனம்

கோடநாடு விவகாரம் அதிமுக ஆட்சிக் காலத்திலேயே வெளியில் வந்தது. ஒரு பெரிய கொலை வழக்கு உள்பட பல்வேறு சிக்கல்களைக் கொண்ட இந்த வழக்கை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அரசு தனது கடமையை செய்ய வேண்டும்.

அதிமுகவினருக்கு மடியில் கனம் இருப்பதால் பயம் இருக்கலாம். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவையில் பேசுவதற்கு யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்காலத்தில்தான் சட்டப்பேரவையின் ஜனநாயகம் காக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோடநாடு கொள்ளை வழக்கு குற்றவாளிகளுக்கு திமுக உதவுகிறது- எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details