தூத்துக்குடி: தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
சிறப்பான வரவேற்பு
அமைச்சராக பதவியேற்ற பின் முதல்முறையாக தூத்துக்குடி வந்த அமைச்சர் சேகர் பாபுவுக்கு தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில் சார்பாக மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அலுவர்களுடன் சாமி தரிசனம் செய்த அவர், கோயில் நிர்வாகம் சார்பில் தரப்பட்ட மரியாதைகளை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆய்வுக்காக அமைச்சர் சேகர் பாபு புறப்பட்டு சென்றார்.
திருச்செந்தூர் விஜயம்
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முகாமிட்ட அமைச்சர் சேகர்பாபு, ஆலய நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பட்டர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அரசு தரப்பில் ஆலய மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிப் பங்கீடு, திட்ட வரையறை உள்ளிட்டவை குறித்து அவர் அலுவலர்களுடன் கலந்தாலோசித்தார்.