வரும் சட்டப்பேரவைத்தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பாக, தொடர்ந்து 3ஆவது முறையாக அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடுகிறார். இவர் மார்ச் 15ஆம் தேதி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
'முதலமைச்சரின் தத்துப் பிள்ளை நான்' - கடம்பூர் ராஜு - Minister Kadampur Raju campaigning in Kayathar area
தூத்துக்குடி: கோவில்பட்டி தொகுதி மக்களுக்காக முதலமைச்சர் என்னை தத்தெடுத்துள்ளார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு பொதுமக்கள் மத்தியில் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.
தற்போது பரப்புரை பயணத்தில், மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவர், இன்று(மார்ச் 17) கயத்தாறு ஒன்றியப் பகுதிகளான துரைச்சாமிபுரம், வெங்கடாசலபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அவருக்குப் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பெண் ஒருவரிடம் குழந்தையை வாங்கி, தூக்கி அவர் கொஞ்சி மகிழ்ந்தது அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், "நான் கோவில்பட்டி தொகுதியை தத்தெடுத்த மாதிரி முதலமைச்சர் என்னை தத்தெடுத்துள்ளார். இந்த பத்தாண்டுகளில் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட நான் தயார். இதேபோல் திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை பட்டியலிடத் தயாரா?. ஆனால், இதுவரைக்கும் திமுகவில் இருந்து பதிலே இல்லை. அவர்கள் செய்தால் தானே பதில் சொல்வார்கள்" என்று தெரிவித்தார்.