தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போக்குவரத்துக் காவலருக்கு பளார் விட்ட அமைச்சரின் உதவியாளர்; என்ன நடந்தது? - anitha radhakrishnan p.a

திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் ஒருவர், போக்குவரத்தை சீர்படுத்திய காவலரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட காவலர் புகார் அளித்து, அதனை வாபஸ் பெற்றுள்ளார்.

அமைச்சருடன் உதவியாளர் கிருபா, anitha radhakrishnan PA
போக்குவரத்து காவலருக்கு பளார் விட்ட அமைச்சரின் உதவியாளர்

By

Published : Oct 20, 2021, 4:24 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர், முத்துக்குமார் (42).

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் சரவணப்பொய்கைப் பகுதி நுழைவு வாயிலில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, நுழைவு வாயிலின் அருகில் உள்ள மணி அய்யர் உணவகம் முன்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணணின் உதவியாளரான கிருபாகரன், தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்குள் சென்றுள்ளார். அப்போது, கோயிலின் உள்பகுதியில் இருந்து வெளியே செல்வதற்காக, கார்கள் வரிசை கட்டி நின்றுள்ளன.

காவல் நிலையத்தில் காவலர் புகார்

அமைச்சரின் உதவியாளரின் வாகன ஓட்டுநர் குமாரிடம் காரை, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதபடி சற்று ஓரமாக நிறுத்தும்படி, முத்துக்குமார் கூறியுள்ளார். இதனால், காவலர் முத்துக்குமாரிடம் கார் ஓட்டுநர் வாக்குவாதம் செய்துள்ளார்.

காவலர் முத்துக்குமார்

இதையடுத்து, அந்த ஓட்டுநர் அமைச்சரின் உதவியாளர் கிருபாவிடம் இதுகுறித்து கூறியுள்ளார். அப்போது, கிருபா தலைமைக் காவலரை அழைத்து, அவரது கன்னத்தில் அறைந்துவிட்டு, காரை எடுத்துச் சென்றுள்ளார். பின்னர், தலைமைக் காவலர் முத்துக்குமார், அமைச்சரின் உதவியாளர் மீது திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஓட்டுநரிடம் காவலரின் வேண்டுகோள்

இந்தச் சம்பவம் குறித்து போக்குவரத்து தலைமைக் காவலர் முத்துக்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் வாகனசோதனை சாவடி முன்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதுதான் என்னுடையப் பணி. எப்போதும் போன்று போக்குவரத்தை சரிசெய்து கொண்டு இருந்தேன்.

அந்த சாலையில் உள்ள மணி அய்யர் உணவகம் முன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபா தனது காரை (TN 43G 8969 எண் கொண்ட இன்னோவா கார்) நிறுத்திவிட்டு, அந்த உணவகத்திற்குள் போனார். காரை அந்த ஓட்டுநர், ஓரமாக நிறுத்தாமல் சாலையின் நடுவே நிறுத்தினார்.

அந்த சாலை குறுகலானது என்பதால், கோயிலுக்குச் செல்லும் கார்கள், கோயிலில் இருந்து வெளியே வரும் கார்கள் என அனைத்து வாகனங்களும் செல்வதால், அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசலாகத்தான் எப்போதும் இருக்கும்.

அமைச்சரின் உதவியாளர் கிருபா

இந்நிலையில்தான், மணி அய்யர் உணவகத்திற்கு முன்னால் சாலையின் நடுவே, அமைச்சரின் உதவியாளரின் கார் நிறுத்தப்பட்டிருந்தது.

அதனால் கோயிலில் இருந்து வெளியே வரும் கார்கள் வரிசையாக நிற்க மிகுந்த வாகன நெரிசல் ஏற்பட்டது. எனவே, அந்த காரின் ஓட்டுநர் குமாரிடம் சென்று, 'சார் காரை கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க. பின்னால பாருங்க, எவ்வளவு கார் வரிசை கட்டி நிற்கிறது. ரொம்ப டிராஃபிக் ஆகிடும்'என்று கூறினேன்.

ஓங்கி அறைந்த உதவியாளர்

ஆனால், அவர்,‘காரை எடுக்க முடியாது. உன் வேலையைப் பார்த்துட்டுப் போ. டிராஃபிக் ஆனா எனக்கு என்ன?' எனச் சொன்னார். அப்போது பக்கத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் வந்து, 'என்னப்பா இப்படி மரியாதை இல்லாமப் பேசலாமா' என்று சொல்லி, அவரை அனுப்பினார்கள்.

உடனே, உணவகத்திற்குள் சென்றவர் கிருபாகரனிடம் என்ன சொன்னார் எனத் தெரியவில்லை.

அமைச்சருடன் உதவியாளர் கிருபா

வேகமாக நடந்து வந்தவர், 'என் டிரைவரை எப்படி காரை எடுத்து, தள்ளி நிப்பாட்டச் சொல்லலாம்' எனச் சொல்லி கோபமாக என்னுடைய, இடது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

அதில் என் மூக்குக் கண்ணாடி கீழே விழுந்தது. காரை ஓரமாக நிறுத்தச் சொன்னது தவறா?. நான், உடனே திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் அமைச்சரின் உதவியாளர் கிருபா மீது புகார் கொடுத்தேன்.

புகார் வாபஸ்

புகாரை வாங்கி மட்டும் வைத்தார்கள். இதற்கிடையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசியில் அழைத்து, காவல் நிலையம் வரச்சொன்னார்கள்.

பின்னர், நான் காவல் நிலையம் சென்ற சிறிது நேரத்தில், கிருபாகரன் காவல் நிலையத்திற்கு வந்தார். 'அடித்தது தவறு' என்று கூறி, 'என்னிடம் மன்னிப்புக் கேட்டார். மன்னிப்புக் கேட்ட பிறகு, எதற்கு அந்தப் புகார் என்று அதை வாபஸ் பெற்றுவிட்டேன்" என்றார்.

இதையடுத்து, அமைச்சரின் ஆதரவாளர்களில் விசாரித்தபோது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர்களில் கிருபா ரொம்ப நல்லவர் எனவும், எம்.எல்.ஏ அலுவலகத்தில் மனு கொடுத்த அனைவருக்கும் கிருபாவைப் பற்றித் தெரியும் எனவும் கூறப்படுகிறது.

இந்து முன்னணி போஸ்டர்

மேலும், என்ன மனநிலையில் காவலரை அடித்தார் என்பதுதான் தெரியவில்லை எனக்கூறினர். அதேபோல், போக்குவரத்துக் காவலர் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல், கன்னத்தில் அறைந்ததும் தவறுதானே என்கிறார்கள், காவலர்கள் தரப்பு.

இந்து முன்னணி போஸ்டர்

இதற்கு இடையில் இந்து முன்னணி அமைப்பினர், 'காவலருக்கு அடி உதை, இது தான் விடியல் அரசா' என்று கையெழுத்து பிரதியை திருச்செந்தூரில் ஒட்டத் தொடங்கி உள்ளனர்.

இதையும் படிங்க: மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை தீவிரப்படுத்த ஸ்டாலினின் பக்கா பிளான்!

ABOUT THE AUTHOR

...view details