தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பெய்த கனமழையின் காரணமாக மானாவாரி பயிர்கள் மற்றும் விவசாய பயிர்கள் உள்ளிட்ட அனைத்தும் மழை நீரில் மூழ்கி நாசமாகின. மழையினால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு பெற்று தர வலியுறுத்தி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளித்து வந்தனர். விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று வேளாண்துறை சார்பில் பயிர் சேத கணக்கீடு பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்ட சேத விவரங்களை கணக்கிடுவதற்காக தமிழ்நாடு அரசின் வேளாண் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி இன்று தூத்துக்குடி வந்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியர் விஷ்ணுசந்திரன் தலைமையில் வேளாண் துறை, தோட்டக்கலை துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் அலுவலர்களுடன் அவர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தும், பயிற்சி சேதங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த வெள்ளத்தினால் சேதமடைந்த பயிர்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்களை கணக்கிடும் பணியை ஆய்வு செய்ய உள்ளோம். மாவட்டத்தில் மழையினால் மொத்தம் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 274.12 ஹெக்டேர் பரப்பளவுக்கு பயிர் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், சராசரி கணக்கீட்டின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 80 சதவீத அளவுக்கு கனமழையினால் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பயிர் சேத விவரங்கள் கணக்கிடப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பேரில் அரசு உரிய முடிவு எடுக்கும். குறிப்பாக எந்த ஒரு விவசாயியும் விடுபடக்கூடாது என்ற அடிப்படையில் விவசாயியின் பெயர், ஆதார் எண், வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே பயிர் இழப்பீடு பெறுவது குறித்து கவலைப்பட வேண்டாம்.
வேளாண் துறை இயக்குனர் தக்ஷிணாமூர்த்தி ஆலோசனை கூட்டம் மாவட்டத்தில் மானாவாரி பயிர்களான பாசிப்பயறு, உளுந்து, சோளம், மக்காச்சோளம், கம்பு உள்ளிட்டவை பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இதுதவிர நெல் ரகங்களில் குறிப்பிட்ட அளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட இடங்களில் பயிர்சேதங்களை கணக்கீடு செய்யும்போதுதான் உண்மையான சேத விவரங்கள் தெரியவரும். மேலும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் பயிர் இழப்பீட்டுத் தொகையும், பயிர் காப்பீடு தொகை கிடைப்பதற்கான நடவடிக்கைகள் ஒருங்கே நடைபெற்று வருகின்றன என்றார்.
இதையும் படிங்க:புதிய நெல் கிட்டங்கி கட்டடம் திறப்பு விழா