தூத்துக்குடி:கர்நாடக மாநிலம் மங்களூரு ஆழ்கடல் பகுதியில் சுமார் 60 கடல் மைல் தொலைவில் கேரளாவைச் சேர்ந்த படகில் 7 தமிழ்நாடு மீனவர்களும், 7 மேற்கு வங்க மீனவர்களும் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த சிங்கப்பூரை சேர்ந்த சரக்குக் கப்பல் மோதியதில் படகு மூழ்கி விபத்து ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரையும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுனில் தாஸ் என்பவரையும் உயிரோடு கப்பல் ஊழியர்கள் மீட்டுள்ளனர். மேலும் மூன்று மீனவர்களது உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவ கிராமத்தை சேர்ந்த டென்சன் உள்ளிட்ட 9 மீனவர்கள் மாயமானார்கள். இந்த மீனவர்களை தேடும் பணியை இந்திய கடலோர காவல் படை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது. இந்திய கடலோர காவல் படை கப்பல் மூலமும், ஹெலிகாப்டர் மூலமும் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகிறது.
இதில் கடலில் மாயமான தூத்துக்குடி மீனவர் டென்சன்-ஐ மீட்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டும் என டென்சனின் மனைவி ராணி, அவரது இரண்டு மகள்கள் உள்பட மீனவ கிராம மக்கள் கண்ணீர் மல்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.