தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நாளை மறுநாள் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து அம்மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் கூறுகையில், "தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுக்களின் வழிகாட்டுதலின்படி லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
லோக் அதாலத் என்பது இந்தியாவில் ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படும். அதன்படி இரண்டாவது முறையாக, நாளை மறுநாள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் மோட்டார் வாகன வழக்குகள், சிவில், காசோலை மோசடி, குடும்ப நல வழக்குகள் உட்பட 5,000க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இதுவரையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியின் மூலமாக உரிமை வழக்குகளில் 79 ஆயிரத்து 58 ஆயிரம் ரூபாய்க்கும், மோட்டார் வாகன இழப்பீடு வழக்குகளில் 1 கோடியே 12 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அளவுக்கு என மொத்தம் 1 கோடியே 91 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்க்கு வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. இவை தவிர தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் மூலமாக 210 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 36 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.