தூத்துக்குடி:மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா வெகு விமர்சையாக பத்து நாட்கள் கொண்டாடப்படும். இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று(செப். 26) தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கொடிபட்டமானது யானை மேல் வைத்து வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அதனை தொடர்ந்து 9 மணிக்கு மேல் கோயில் உள் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.