மதுரை:தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் குலசை தசராவை பொதுவெளியில் கடற்கரையில், பக்தர்கள் இல்லாமல் நடத்தக்கோரி, ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், "தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் தசரா திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவின்போது பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனுக்காக கடவுளை வேண்டி, பல்வேறு வேடங்கள் அணிந்து விரதம் இருப்பார்கள்.
'கடற்கரையில் நடத்தப்படுவதே மரபு'
'தசரா' நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் கடற்கரையில் புரட்டாசி மாதம் பெளர்ணமி அன்று 'சூரசம்ஹார நிகழ்ச்சி' நடைபெறும்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், இந்த ஆண்டு வரும் 15ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பக்தர்களுக்கு அனுமதி இல்லாத சூழ்நிலையில், பாரம்பரியமாக நடைபெறும் குலசேகரன்பட்டின கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்துவதால், எவ்வித கரோனா பரவலும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.
அதேபோல், குலசேகரன்பட்டினம் தசரா நிகழ்ச்சியில் பொதுமக்களை அனுமதிக்காமல், கடற்கரையில் பராம்பரிய முறைப்படி சூரசம்ஹார நிகழ்ச்சியை இந்த ஆண்டு நடத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.