தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜூலை 13ஆம் தேதி சார்பு நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதுதொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான முன் தயாரிப்பு ஆலோசனை கூட்டம் நேற்று சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
கோவில்பட்டியில் சார்பு நீதிமன்ற ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி: கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் தொடர்பான முன் தயாரிப்பு ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
இதற்கு சார்பு நீதிமன்ற நீதிபதி எம். அகிலாதேவி தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வி.முரளிதரன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் எம்.ஜெபராஜ், காவல் ஆய்வாளர்கள் ஐயப்பன், முத்துலட்சுமி, துணை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வங்கி மேலாளர்கள், காப்பீடு நிறுவன மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், விபத்து வழக்கில் நஷ்டஈடு பெற்றுத் தருவது, குடும்ப பிரச்னைகளை முடித்து வைப்பது, நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள குற்றவியல் சிறு வழக்குளை முடித்து வைப்பது, காசோலை மோசடி வழக்குகளை சமாதானமாக பேசி முடிப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் சந்திரசேகர், வழக்கறிஞர்கள் டி. முத்துகுமார், பாப்புராஜ், சம்பத்குமார், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.