தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளம் பேரூராட்சி வணிக வளாகத்தில் உள்ள முடிதிருத்தும் கடையில் பணிபுரியும் வடமாநில இளைஞர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் அவருடன் தொடர்பில் இருந்த காவல் துறையினர், மருத்துவத் துறையினர், பொதுமக்கள் என சுமார் நூறு பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இச்சூழலில் பங்களா தெருவைச் சேர்ந்த பிரவீன்குமார் (30) என்பவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் ஊரடங்கு அறிவிக்கபட்டபோதே விளாத்திகுளம் வந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பின்பு மார்ச் 24ஆம் தேதி மனைவியின் தந்தை இறுதிச்சடங்கிற்கு கோவில்பட்டிக்குச்ச் சென்றுவந்துள்ளார். இதனையடுத்து கடந்த 4 நாள்களாகத் தீராத காய்ச்சல், சளியால் சிரமப்பட்டுவந்த பிரவீன்குமார், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார் மற்றும் சுகாதாரத்துறையினர் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர் வசித்த பங்களா தெரு, அரசு மேல்நிலைப் பள்ளி செல்லும் சாலை ஆகிய இரண்டு பகுதிகளையும் தொற்று பாதிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, பொதுமக்கள் வெளியே செல்வதற்குத் தடைவிதித்து சீல் வைத்தனர். தொடர்ந்து அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
அவரின் மனைவி, தாய், குழந்தை, விளாத்திகுளம் மீனாட்சி நகரிலுள்ள அவரது உறவினர்கள் ஆறு பேர் ஆகியோரின் ரத்த மாதிரிகள் பரிசோதனையில் உள்ளது. மேலும் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.