உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி உந்தும் வளாகம் சார்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி தொடங்கியது. விண்வெளி கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கல்லூரிச் செயலாளர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி முகமை திட்ட இயக்குநர் மூக்கையா, இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் ஆர்.எம். வாசகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பேசினர்.
இதில், மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய திட்ட இயக்குநர் மூக்கையா பேசுகையில், “கேட் வே ஆஃப் த ஸ்டார்" என்ற தலைப்பில் விண்வெளி மண்டலங்கள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ஆராய்ச்சியின்படி விண்ணில் நிலவைத் தவிர நான்கு இடங்களில் மனிதன் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதற்கேற்றபடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள விண்வெளித்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வருங்காலங்களில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் மண்ணெண்ணெயில் இயங்கும் வகையில் ஏவுகணை இயந்திரங்கள், வடிவமைப்புகள் செய்யச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.