தூத்துக்குடி: கோவில்பட்டி கதிரேசன்கோவில் சாலையைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர் மசாலா பொருள்கள் விநியோகிஸ்தராக பணிசெய்து வருகிறார். ஜெயப்பிரகாஷ் தனது வேலை நிமர்த்தமாக கடந்த 2018ஆம் ஆண்டு மதுரைக்குச் சென்றுவிட்டு இரவு 11 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கோவில்பட்டி வர அரசு பேருந்தில் பயணித்தார்.
பேருந்து கிளம்பி சிறிது தூரம் சென்றதும் டிக்கெட் எடுப்பதற்காக ஜெயப்பிரகாஷ், நடத்துநரிடம் 500 ரூபாயை கொடுத்துள்ளார். அதனைக் கண்ட நடத்துநர் “சில்லறை இல்லை பேருந்தை விட்டு கீழ இறங்கு” எனக் கூறியுள்ளார். மேலும், தகாத வார்த்தைகளாலும் பேசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயப்பிரகாஷ், “இரவு நேரம் என்பதால் பாதி வழியில் இறங்க முடியாது. திருமங்கலம் வந்ததும் அங்குள்ள கடைகளில் சில்லைறை மாற்றித் தருகிறேன்” எனக் கூறியுள்ளார். திருமங்கலத்தில் பேருந்து நிற்காது என்று கூறியவாறு நடத்துநர் சென்றுவிட்டதாக தெரிகிறது.
சில்லரை தராத நடத்துநர்
ஆனால், திருமங்கலத்தில் 10 நிமிடங்கள் பேருந்து நின்றுள்ளது. இந்நிலையில், ஜெயப்பிரகாஷ், இங்குள்ள கடைகளில் சில்லறை மாற்றித் தருகிறேன் தான் கொடுத்த 500 ரூபாயை கொடுங்கள் என நடத்துநரிடம் கேட்டுள்ளார். ஆனால் நடத்துநர் டிக்கெட் மட்டும் கொடுத்துவிட்டு 500 ரூபாயையும் தரவில்லை, டிக்கெட் பணம் போக மீதி சில்லறையும் தரவில்லை.
பின்னர் கோவில்பட்டியில் பேருந்து வந்து நின்றதும், ஜெயப்பிரகாஷ் நடத்துநரிடம் மீதி பணத்தினைக் கேட்டபோது, மதுரை புதுக்குளத்தில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயப்பிரகாஷ், இது தொடர்பாக மதுரையிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளரிடம் புகார் அளித்தார்.