தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா காலத்தில் தூத்துக்குடி துறைமுகம் எவ்வாறு செயல்படுகிறது - துறைமுகத் தலைவர் டி.கே.ராமசந்திரன் பிரத்யேக பேட்டி - Corona VOC port trust

தூத்துக்குடி: கரோனா சூழலில் தமிழ்நாட்டின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் எவ்வாறு செயல்படுகிறது என துறைமுக தலைவர் டி.கே.ராமசந்திரன் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி இதோ...

VOC
VOC

By

Published : May 15, 2020, 3:16 PM IST

Updated : May 15, 2020, 8:49 PM IST

"கரோனா" பாதிப்பின் தாக்கம் காரணமாக பொருளாதார முடக்கம் ஏற்பட்டு மந்த நிலை நிலவிவருகிறது. அரசு அறிவித்த லாக்டவுன் காரணமாக அத்தியாவசிய சரக்கு போக்குவரத்தை தவிர மற்றவை முற்றிலுமாக முடங்கின. சுமார் 40 நாள்களுக்கும் மேலாக முடங்கி கிடந்த பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தொழிற்சாலைகள், விவசாயம், கட்டுமான பணிகள் செயல்பட அனுமதியளித்துள்ளது.

நாட்டின் 13 பெரிய துறைமுகங்களில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒன்றாகும். தென் தமிழ்நாட்டின் வருவாய்க்கான முதன்மை மையமாக திகழ்வது தூத்துக்குடி துறைமுகம். கரோனா சூழலில் தமிழ்நாட்டின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் துறைமுகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய துறைமுகத்தின் நிர்வாகத்தை அனுகினோம்.

தென் தமிழ்நாட்டின் தூணான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கரோனாவால் சில தடுமாற்றங்களை சந்தித்ததென்றும், சரக்கு கையாளுகையில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக துறைமுகத்தலைவர் டி.கே.ராமசந்திரன் ஈடிவி பாரத் செய்தி நிறுனத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலை தற்போது பார்க்கலாம்.

கேள்வி: 2019-20ஆம் நிதியாண்டு தொடங்கி தற்போதைய ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்ட சரக்குகள் மொத்த அளவு என்ன? வருவாய் என்ன?

பதில்: சென்ற ஆண்டுமுதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை 11 மில்லியன் டன்‌ சரக்கு கையாண்டுள்ளோம். கடந்த ஆண்டு மட்டும் ரூ.160 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு வருவாய் 10 சதவீதம் குறைந்துள்ளது. நிதியாண்டுபடி கணக்கிட்டால் மார்ச் மாதம் வரை கையாண்ட சரக்குகள் மொத்த அளவு, முந்தைய ஆண்டை காட்டிலும் அதிகம். ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தை கணக்கிடுகையில் சரக்கு கையாளுதல் அளவு குறைந்துள்ளது.

கேள்வி: தற்போதுள்ள சூழலில் எந்த மாதிரியான சரக்குகள் ஏற்றுமதி - இறக்குமதி செய்யப்படுகின்றன?

பதில்: உணவு தயாரிப்பு பொருட்கள், அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி, கால்நடை தீவனங்கள், உரம், கட்டுமான பொருட்கள், சிமெண்ட் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்கிறோம்.

வ.உ.சிதம்பரனார் துறைமுக தலைவர் டி.கே.ராமசந்திரன் பேட்டி

கேள்வி: கரோனா ஊரடங்குக்கு பின் சரக்கு கையாளுகை தொய்வை நிவர்த்தி செய்ய என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

பதில்: சரக்குகள் ஏற்றுமதி-இறக்குமதியில் எவ்வித பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், பணியாளர்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற அடிப்படையிலும் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். சரக்கு கையாளுதலுக்காக புதிதாக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறைமூலமாக துறைமுகத்துக்கு வரும் வாகனங்களுக்கு வாகன அனுமதிச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, சேலம், ஈரோடு போன்ற பகுதிகளிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு சரக்குகள் எடுத்துவருவதற்கும் இங்கிருந்து சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கும் எவ்வித தடையும் ஏற்படாதவாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அனுமதி பெற்று தந்துள்ளோம்.

இதுதவிர ஏற்றுமதி நிறுவனத்தினர், சரக்கு கையாளுனர் சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர்களுடன் பல்வேறு கட்டங்களாக காணொலி மூலம் ஆலோசனைக்கூட்டம் நடத்தி சரக்கு கையாளுதலில் அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதேபோல, துறைமுகத்துக்குள் கண்டெய்னர் கையாளுதலில் பாதுகாப்பு அவசியத்தை கருத்தில் கொண்டு, முகக் கவசம், கையுறை அணிதல், கையை அடிக்கடி சுத்தம் செய்தல் மற்றும் முழு உடல் பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டே கையாளப்பட்டது. குறிப்பாக துறைமுக மருத்துவ குழுவினரும் அனைத்து நிலைகளிலும் மருத்துவ சோதனைகளை நடத்தினர். மேற்கண்ட நடவடிக்கைகள் காரணமாக தற்போது வரை ஒருவருக்கு கூட கரோனா பாதிப்பு இல்லமால் பணிபுரிந்துவருகிறோம்.

கேள்வி: சரக்கு கையாளுதலை ஊக்கப்படுத்த சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளனவா?

பதில்: மத்திய அரசு அறிவுறுத்தல்படியும், கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படியும் சில சலுகைகளை அறிவித்துள்ளோம். அதன்படி, ஊரடங்கு காலக்கட்டத்தில் துறைமுகத்தில் தேங்கியிருக்கும் சரக்குகளை எடுத்துச் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டாலோ அல்லது எடுத்துசெல்லாமலிருந்தாலோ சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எவ்வித அபராத கட்டணமோ அல்லது கூடுதல் கட்டணமோ வசூலிக்கப்படாது என அறிவித்துள்ளோம்.

கேள்வி: தற்போது எந்தெந்த நாடுகளிலிருந்து சரக்குகள் கையாளப்படுகின்றன? சீனாவிலிருந்து வரும் சரக்குகள் எவ்வாறு கையாளப்படுகின்றன?

பதில்: இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, மாலத்தீவு, ரஷ்யா, இஸ்ரேல், கொரியா, ஜப்பான், கத்தார், சுதான் உள்ளிட்ட 60 நாடுகளிலிருந்து தற்போது சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுகின்றன. சீன கப்பல் வருகையால் துறைமுகத்தில் கரோனா பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக வந்த செய்தி தவறானது. ஏனெனில் சீனாவிலிருந்து சரக்கு கப்பல்கள் வந்தாலும் கூட அரசின் வழிமுறைகளின்படி, கப்பல் கிளம்பிய நாளிலிருந்து 14 நாட்கள் கழித்தே சரக்குகளை இறக்க அனுமதிக்கப்படுகிறது. அதிலும் வெளிநாட்டு நபர்கள் யாரும் தரையிறங்க அனுமதி கிடையாது. மேலும் கரோனாவால் பாதிப்புக்குள்ளான 47 நாடுகளின் பட்டியலை கொண்டு அந்தந்த நாட்டிலிருந்து வரும் கப்பலில் உள்ள சரக்குகளை முழு பாதுகாப்புடனே கையாண்டு வருகிறோம்.

கேள்வி: ஊரடங்குக்கு பின் சரக்கு கையாளுதலில் ஏற்பட்டுள்ள தேக்கங்களின் விவரம் அவற்றின் மதிப்பு என்ன?

பதில்: ஏப்ரல் மாதம் பொறுத்தவரை 20 விழுக்காடு சரக்கு கையாளுதல் குறைந்துள்ளது. ஆனால் பெரிய அளவில் சரக்குகள் தேக்கமடையவில்லை. ஏனெனில் துறைமுகத்தின் முழு சரக்கு கொள்ளளவில் சரக்கு பெட்டகங்கள் கையாளுகை 27 விழுக்காடு மட்டுமே உள்ளது. பெட்டகங்கள் அல்லாத மொத்த சரக்குகள் 70 விழுக்காடு அளவுக்கு உள்ளது. துறைமுகத்தில் தற்போது 30 விழுக்காடு அளவுக்கு கொள்ளளவு இடம் காலியாக உள்ளது. எனவே, சரக்கு கையாளுதலுக்கு போதுமான அளவு இடம் இருப்பு உள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக நிலங்களை கையகப்படுத்தி சரக்குகளை கையாளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி: இந்த காலகட்டத்தில் துறைமுகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா?

பதில்: கரோனாவுக்காக ஆட்குறைப்பு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. ஆனால் அரசின் அறிவுறுத்தல்படி 33 விழுக்காடு பணியாளர்களை கொண்டு துறைமுக பணிகளை கவனித்து வருகிறோம். இதற்காக துறைமுக மொத்த பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்களை 3 நாட்களுக்கு ஒருமுறை பணிசுழற்சி முறையில் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்பளபிடித்தமோ, பணி விடுமுறையோ வழங்கப்படவில்லை.

கேள்வி: கரோனாவினால் துறைமுக விரிவாக்க உள்கட்டமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதா? அதன் திட்டம் விவரம் என்ன?

பதில்: ஊரடங்கு காலத்தில் பணியாட்கள் வருகை இல்லாததால் துறைமுக விரிவாக்க கட்டுமானப் பணிகள் தடைப்பட்டன. ஆனால் தற்போது அவை மீண்டும் தொடங்கப்பட்டு வேகமெடுத்துள்ளது. கரோனா ஊரடங்கால் பெரிய அளவில் துறைமுக பணிகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

தற்போது தொடங்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு விரிவாக்க பணிகளில் கோரம்பள்ளத்தை இணைக்கக்கூடிய பாலத்தின் பணிகள் விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளோம். ரூ.45 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த பணியில் நான்கு வழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்துக்கு வரும் வாகனங்கள் விரைவாக எவ்வித சிரமமும் இன்றி வந்து செல்லமுடியும் என்றார்.

இதையும் படிங்க:கரோனா காலத்தில் காப்பீட்டின் அவசியம்; அனைத்து சந்தேகங்களுக்கும் அமெரிக்கை நாராயணன் பதில்

Last Updated : May 15, 2020, 8:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details