தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட சில்வர்புரத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (42). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் ஓட்டுநராக வேலை செய்துவந்தார்.
இந்த நிலையில் சில்வர்புரத்தில் உள்ள காப்பகம் அருகே நந்தகுமார் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் இது குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
கொலைசெய்யப்பட்ட ஓட்டுநர் குடும்பத்துடன் அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நந்தகுமாரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் நந்தகுமார் கொலைசெய்யப்பட்ட காரணம் குறித்த காவல் துறையினரின் விசாரணையில், சில்வர்புரத்தைச் சேர்ந்த ஜார்ஜ் (45) என்பவர் நந்தகுமார் வேலைசெய்த அதே பர்னிச்சர் கடையில் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்தார்.
இந்த நிலையில், ஜார்ஜை கடந்த சில மாதங்களுக்கு முன் பணியிலிருந்து திடீரென நிர்வாகத்தினர் நீக்கியுள்ளனர். தான் வேலை இழந்ததற்கு நந்தகுமார்தான் காரணம் என ஜார்ஜ் விரோதம் கொண்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் இன்று அதிகாலை நந்தகுமார் பணி முடிந்து திரும்புகையில் ஜார்ஜ் அவரை குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தடயவியல் வல்லுநர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தடயவியல் வல்லுநர்கள் கொலை நடைபெற்ற இடத்தில் கிடைத்த தடயங்களைச் சேகரித்தனர்.
மேலும், கொலை நடைபெற்ற இடம் அருகே குடியிருப்புகள் அதிகம் இருப்பதால் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி காவல் துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.