ஆங்கிலேயர்கள் இந்திய மண்ணில் தங்களது ஆதிக்கம் செலுத்தியபோது அவர்களை துணிந்து எதிர்த்தவர், வீரபாண்டிய கட்டபொம்மன்.
ஆங்கிலேய வணிகம் கட்டபொம்மனின் ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் தனது வணிகத்தினை தொடங்க நினைத்த போது, தனது துணிச்சலால் ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்றார். இந்த 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, மாவீரன் கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றை விளக்குகிறது இந்த தொகுப்பு....
தமிழ்நாட்டில் உள்ள இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ளது, பாஞ்சாலங்குறிச்சி. அந்த ஊரில் 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி திக்குவிசய கட்டபொம்மன் மற்றும் ஆறுமுகத்தம்மாள் என்கிற தம்பதிக்கு மகனாய் பிறந்தார், வீரபாண்டிய கட்டபொம்மன். இவரது இயற்பெயர் வீரபாண்டியன் மற்றும் அவர்களது குடும்பப்பெயர் கட்டபொம்மன் இது இரண்டும் மருவி வீரபாண்டிய கட்டபொம்மன் என்றானது.
கட்டபொம்மனின் உடன் பிறந்தவர்களுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர். அவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உண்டு. இவர் அரச குடும்பம் என்பதால் செல்வாக்காகவே வளர்ந்தார். பிறகு தனது தந்தையின் மேல் வைத்த பாசம் மற்றும் ஈர்ப்பின்பேரில், அவர் தனது இளம் வயதில் அவரது தந்தையான திக்குவிசய கட்டபொம்மனுக்கு உதவியாக இருந்தார்.
பிறகு அவர் இளைய வயதினை அடைந்ததும் வீரசக்கம்மாள் என்கிறவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாகும்வரை புத்திர பாக்கியம் அமையவில்லை. இவரது சந்ததி இவருடன் முடிந்துவிட்டது.
தனது 30ஆம் வயதில் தனது தந்தையின் பாளையக்காரர் என்ற அரியாசனத்தில் அமர்ந்தார், கட்டபொம்மன். அவருக்கு இரு சகோதரர்கள் இருந்தும் அவர் அரியணை ஏறினார். இதற்குக்காரணம் அவர் பெற்ற நன்மதிப்பும் அவரது வீரமும் தான். இவையிரண்டை வைத்தே அவர் பாளையக்காரர் அரியாசனத்தில் அரியணை ஏறினார்.
ஆங்கிலேயர்கள் இங்கிருந்த ராஜ்ஜியங்களில் தொடர்ந்து வரி வசூல் செய்து கொண்டிருந்தனர். தொடர்ந்து பல ராஜ்ஜிய மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டி வந்தனர். இதனால் கட்டபொம்மனும் அவர்களுக்கு கப்பம் கட்டவேண்டி இருந்தது. தன் ராஜ்ஜியத்தில் ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்டும் அளவிற்குப் பணம் இல்லை என்பதனால் அவன் மக்களிடம் பணம் வசூலித்தான். அப்போது அந்தப்பகுதியில் வாழும் மக்கள் அவனை வசைபாடத் தொடங்கினர்.