தூத்துக்குடி : தமிழ்நாட்டின் உப்பு உற்பத்தியில் பெரும்பான்மை, இந்தியாவின் உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் என, முத்து நகரமாக மட்டும் இல்லாமல், உப்பு நகரமாகவும் விளங்குகிறது, தூத்துக்குடி. இந்தப் பெருமையை தூத்துக்குடிக்கு தேடித் தருகிறது, வேம்பார் முதல் காயல்பட்டினம் வரை சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு நீண்டு கிடக்கும் உப்பளங்கள். சிறுமணி, பெருமணி என இரண்டு வகைகளில் விளைவிக்கப்படும் தூத்துக்குடி உப்புகள், தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
தூத்துக்குடியில், ஆண்டொன்றுக்கு 25 லட்சம் டன் உற்பத்தியாகும் உப்பு விளைச்சலை நம்பி, நேரடியாக 30 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 20 ஆயிரம் பேரும் தொழில் செய்து வருகின்றனர்.
பொதுவாக, முன்பனிக்காலமான ஜனவரி மாதத்தில் தொடங்குகிறது உப்பு உற்பத்திக்கான தொடக்க காலப் பணிகள். இளவேனிற்காலமான ஏப்ரல் தொடங்கி கூதிர் காலமான செப்டம்பர் வரை, உப்பு விளைச்சலின் உச்சக் காலம். வடகிழக்குப் பருவமழை தொடங்கும்போது உப்பு விளைச்சல் நிறைவடையும்.
கடந்த சில ஆண்டுகளாக, சரியான விலையில்லாமை, உப்பு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளில் சிக்கல் எனத் தடுமாறி வந்த தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள், இந்தாண்டு இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். இந்த மகிழ்ச்சிக்குக் காரணம், தாமதமாக தொடங்கி கூடுதல் உப்பு உற்பத்திக்கு அவகாசம் தந்த பருவ மழையும், கரோனா பொது ஊரடங்கிலும் தடையில்லாமல் நடந்த தொடர் உற்பத்தியும் தான்.
வழக்கமாக, அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை, இந்தாண்டு மூன்று வாரங்கள் தாமதமாகத் தொடங்கியது. இதனால் வழக்கத்தைவிட கூடுதலாக, 3 வாரங்கள் உப்பு வாரி எடுக்க முடிந்தது என்கிறார்கள், உப்பு உற்பத்தியாளர்கள். இதனால், ஆண்டின் சராசரி உப்பு உற்பத்தியில், 90 விழுக்காடு உற்பத்தி எட்டப்பட்டுவிட்டது. அதாவது, 21.25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
உலகத்தையே மாற்றிய கரோனா, உப்பு உற்பத்தியையும் பாதிக்கும் நிலை உருவான போது, உற்பத்தி பாதிக்காத வண்ணம் மாவட்ட ஆட்சியர் உதவியிருக்கிறார். இதுகுறித்து, தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் கூறும்போது, 'இந்த ஆண்டு பெரிய இடையூறு இல்லாமல் உப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளது. கரோனா ஊரடங்கு தொடங்கிய காலத்தில் உப்பளத் தொழிலாளர்களுக்கு காவல் துறையினர் பல்வேறு கெடுபிடிகளை விதித்தனர். இதனை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
'உப்பு அத்தியாவசியமான உணவுப் பொருள் என்பதால், உப்புத்தொழிலுக்கு எந்த தடையும் இருக்கக் கூடாது என்றும் உப்பளத் தொழிலாளர்களையும், அவர்களின் உரிமைகளையும் தடுக்கக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்’ எனக் கூறினார்.
'இந்த ஆண்டு 90 விழுக்காடு அளவுக்கு உப்பு உற்பத்தியாகியுள்ளது; தற்போது வரை 7.25 லட்சம் டன் உப்பு மட்டுமே உப்பளங்களில் கையிருப்பில் உள்ளது.
நல்ல விளைச்சல் இருந்தாலும், விலையில்லாமல் தவிப்பது உப்பு உற்பத்தியாளர்களுக்கும் பொருந்தும். கடந்த சில ஆண்டுகளாக, நல்ல விலையில்லாமல் இருந்த உப்பின் விலை, இந்தாண்டு தொடக்கம் முதலே சீராக இருந்து வந்தது. உப்பின் தரத்தைப் பொறுத்து டன் ஒன்றுக்கு 1200 ரூபாய் முதல் 1700 ரூபாயாக இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக டன் 600, 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த உப்பு, இந்த ஆண்டு நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. பருவமழை தாமதத்தால் கூடுதலாக உற்பத்தி செய்ய முடிந்தது. மழைக்காலத்தில் உப்பு விளைச்சல் நிறுத்தப்பட்டாலும், தேவையான அளவு உப்பு கையிருப்பில் உள்ளதால், விற்பனை தடைபடாது. மழைக்காலத்தில் உப்பின் விலை இன்னும் அதிகமாகலாம்' என்கிறார் உப்பு உற்பத்தியாளரான பேச்சிமுத்து.
கடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு தான் உப்பு உற்பத்தியும் அதிகரித்து, விலையும் சீராக இருக்கிறது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைவதுடன், தொழிலாளர்களுக்கும் கூலி உயர்வு கொடுக்க முடியும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, உப்பளத்தொழிலாளர்களுக்கு இந்த தீபாவளி மகிழ்ச்சியான தீபாவளியாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: 'மனைவிக்கு சிலை வைத்து வழிபடும் முன்னாள் ராணுவ வீரர்: நிகழ்கால ஷாஜகான் மாடசாமி!