தூத்துக்குடி:தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு மூடியிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆலையை விற்கும் முடிவை அதன் உரிமையாளர் கைவிட வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி ஓப்பந்தகாரர் சங்க துணைத்தலைவர் பரமசிவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 25 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறோம். ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்ட பிறகு மிகப்பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இத்தொழிற்சாலையை நம்பி சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் மட்டுமல்லாது எங்களைப்போன்ற எண்ணற்ற தொழில் நிறுவனத்தினர் வாழ்வாதாரம் இழந்து இருக்கிறோம். சட்டப்போராட்டங்களை கடந்து ஆலை திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் தொழிற்சாலையை விற்பனை செய்யப்போவதாக கடந்த 10 நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆலை விற்பனை முடிவை ஸ்டெர்லைட் நிறுவனம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கூறினார்.
பாதிப்பு இல்லை:தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தால் எந்தவிதமான மாசுபாடும் இல்லை. இந்த நிறுவனம் மூடப்பட்டு இருந்தபோதும் கடந்த ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைப் பாதுகாக்க 6 மாதம் சிறப்பாக ஆக்சிஜனை உற்பத்தி செய்து மருத்துவமனைகளுக்குச் சேவை அடிப்படையில் இலவசமாகக் கொடுத்துள்ளதை அனைவரும் அறிவார்கள்.
இப்படி இருக்க, இந்த நிறுவனத்தால் மாசு ஏற்படுகிறதா? என்பதைத் தமிழ்நாடு அரசு உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை நியமித்து அதன்மூலமாக ஆய்வு செய்திடவேண்டும். தொழிற்சாலை இயக்கப்படும் காலத்தில் தொழிற்சாலையால் மாசுக்கள் எதுவும் ஏற்படுகிறதா? என்பதை இந்த திறன் வாய்ந்த நிபுணர்கள் குழு முழுமையாக ஆய்வு செய்து அந்த குழு தரும் அடிப்படையில் நிறுவனத்தின் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்தார்.