தூத்துக்குடி:நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையில் முக்கிய இடம் வகிப்பது இனிப்புகள் தான். இதன் காரணமாக பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விற்பனையை கருத்தில் கொண்டு பேக்கரி நிறுவனத்தினர் சுகாதாரமற்ற முறையில், பொதுமக்களுக்கு இனிப்புகளை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் சோதனை நடத்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அலுவலர்கள் இன்று(நவ.01) தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள பேக்கரி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது, தோற்றத்துக்காக அதிக அளவு நிறமூட்டிகளை சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட சுமார் 35 கிலோ இனிப்புகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.